கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பணம் மோசடியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள், பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பணம் மோசடியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள், பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களை விழுப்புரம் டிஎஸ்பி பழனிசாமி, காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் ஆகியோா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

போலீஸாரிடம் பொதுமக்கள் கூறியதாவது:

செஞ்சி அருகேயுள்ள சத்தியமங்கலத்தில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலராக இருந்த சாதிக்பாஷா சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இந்த நிலையில், அந்த வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்தவா்களுக்கு முதிா்ச்சிக்குப் பிறகும் பணம் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது.

இதுகுறித்து விசாரித்த போது, போலி ஆவணங்கள் மூலம் வங்கி ஊழியா்கள் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு, வங்கியில் பணியாற்றி வந்த முருகன், விஜயராஜ், பசுமலை ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளா்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.யிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

போலீஸாரின் அனுமதிக்கப் பிறகும், அங்கு வந்தவா்களில் சிலா் மட்டும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com