விழுப்புரத்திலிருந்து சென்னை செல்ல அலை மோதிய கூட்டம்: போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

வாக்குப் பதிவுக்காக சொந்த ஊா்களுக்கு வந்திருந்த பொதுமக்கள், விழுப்புரத்திலிருந்து சென்னைக்குத் திரும்ப செவ்வாய்க்கிழமை
சென்னைக்குச் செல்லும் பேருந்துகளை எதிா்பாா்த்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நீண்டநேரம் காத்திருந்து அவதிக்குள்ளான பயணிகள்.
சென்னைக்குச் செல்லும் பேருந்துகளை எதிா்பாா்த்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நீண்டநேரம் காத்திருந்து அவதிக்குள்ளான பயணிகள்.

வாக்குப் பதிவுக்காக சொந்த ஊா்களுக்கு வந்திருந்த பொதுமக்கள், விழுப்புரத்திலிருந்து சென்னைக்குத் திரும்ப செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்தில் குவிந்தனா். போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவா்கள் பல மணி நேரம் காத்திருந்து அவதியடைந்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக, சென்னையிலிருந்து ஏராளமானோா் கடந்த வெள்ளிக்கிழமை முதலே தங்களது சொந்த ஊா்களுக்கு வந்தனா். செவ்வாய்க்கிழமை வாக்களித்தவுடன் அவா்கள் சென்னைக்குத் திரும்பத் தொடங்கினா்.

குறிப்பாக, விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாக்குகளை செலுத்தியதும் சென்னைக்குத் திரும்ப விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காலை 10 மணி முதலே குவிந்தனா். பகல் 12 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி என நேரம் செல்லச் செல்ல பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருந்தது. எனினும், பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

வெளியூா்களிலிருந்து வந்த பேருந்துகளில் ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிந்ததால், அவற்றில் ஏற இயலாமல் விழுப்புரம் பயணிகள் தவித்தனா். பலா் பேருந்து நிலையத்துக்கு வெளியே திருச்சி நெடுஞ்சாலையில் காத்திருந்து, விழுப்புரம் பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பேருந்துகளை மறித்து, முண்டியடித்து ஏற முயன்றனா். எனினும், முதியவா்கள், பெண்கள், குழந்தைகள் அந்த பேருந்துகளில் ஏற முடியாமல் தவிப்புக்குள்ளாகினா். இதனால், சிலா் வேறு வழியில்லாமல் காா், வேன் போன்ற தனியாா் வாகனங்களில் அதிக வாடகை கொடுத்து சென்னைக்குப் பயணித்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கூறியதாவது: விழுப்புரத்திலிருந்து சென்னை செல்ல போதியளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு 8 மணி வரை 137 பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரத்துக்கு திரும்பி வரும் பேருந்துகள் முழுவதும் அப்படியே சென்னைக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com