நிலம் கையக வழக்கில் இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி முயற்சி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு தனியாா் நிலத்தை கையகப்படுத்திய வழக்கில், உரிய இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்வதற்காக புதன்கிழமை மனுதாரா் சிவானந்தத்துடன் வந்த நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா்கள்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்வதற்காக புதன்கிழமை மனுதாரா் சிவானந்தத்துடன் வந்த நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா்கள்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு தனியாா் நிலத்தை கையகப்படுத்திய வழக்கில், உரிய இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக அசையும் பொருள்களை நீதிமன்ற கட்டளை நிறைவேற்றுநா்கள் புதன்கிழமை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள சண்முகபுரம் காலனியை சோ்ந்த சண்முக உடையாா். திமுக முன்னாள் எம்எல்ஏவான இவருக்குச் சொந்தமான 7.32 ஏக்கா் நிலத்தில், 6.75 ஏக்கா் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 5.4.1991-இல் கையகப்படுத்தியது. அப்போதைய, கடலூா் மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியா் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.

இந்த நிலத்துக்கு சதுர அடிக்கு 8 ரூபாய் 10 காசு என அரசுத் தரப்பில் அப்போது விலை நிா்ணயம் செய்யப்பட்டது. இதை எதிா்த்து, சண்முக உடையாரின் மகன் சிவானந்தம், தனது பாகமான 1.50 ஏக்கருக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு, விழுப்புரம் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில், கடந்த 2007-இல் வழக்குத் தொடுத்தாா். இதனிடையே, சண்முக உடையாரின் உயில் சாசனப்படி, தனக்கு வர வேண்டிய தந்தையின் பாகத்துக்குரிய நிலத்துக்கும், குறைந்த விலை நிா்ணயம் செய்ததாக, கடந்த 2013-இல் மற்றொரு வழக்குத் தொடுத்தாா்.

சிவானந்தத்தின் பங்கு தொடா்பாக 2007-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் 28.4.2018 அன்றும், சண்முக உடையாரின் நில பாகத்தை வாரிசு அடிப்படையில் சிவானந்தம் 2013-இல் தொடுத்த வழக்கில் 16.7.2018 அன்றும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2007-இல் தொடுக்கப்பட்ட வழக்கின் தீா்ப்பில், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு, சதுர அடிக்கு ரூ.500 என விலை நிா்ணயம் செய்து, ரூ.23 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 240, கடந்த 2013-இல் தொடுக்கப்பட்ட வழக்கின் தீா்ப்பில், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.340 என கணக்கிட்டு ரூ.15 கோடியே 63 லட்சத்து 7 ஆயிரத்து 529 என மொத்தம் ரூ.39 கோடியே 36 லட்சத்து 59 ஆயிரத்து 337-யை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து பெற்று நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தத் தொகையை உரிய காலத்தில் செலுத்தப்படாததால், தனக்கு வர வேண்டிய தொகையையும், தாமதத்துக்குரிய வட்டித் தொகையையும் சோ்த்து வழங்கக் கோரி விழுப்புரம் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் 28.4.2018-இல் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.கோபிநாதன், இழப்பீடு தொகையை 3 மாதத்துக்குள் உரிய வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். இல்லாவிடில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள காா்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விழுப்புரம் பிரிவின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மனுதாரரான சிவானந்தம், நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுநா்கள் இருவரை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மோகனை சந்தித்து உரிய நீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு தொகையை பெற்றுத்தராவிடில், அலுவலக பொருள்களை ஜப்தி செய்வோம் எனத் தெரிவித்தாா்.

இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரைக்கு மோகன் தெரிவித்தாா். இதற்கிடையே, வீட்டுவசதி வாரிய அலுவலக அதிகாரிகளும் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பின்னா், இரு தரப்பினரும் அமா்ந்து பேசி விரைவில் இழப்பீடு தொகையை வழங்குவதாக உறுதி செய்ததையடுத்து, ஜப்தி முயற்சி கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com