இரவு 9 மணிக்கு கடைகள் அடைப்பு

இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
விழுப்புரம் மீன் சந்தை நேரம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.
விழுப்புரம் மீன் சந்தை நேரம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.

இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.

விழுப்புரம் நகரில் உள்ள நேருஜி சாலை, எம்.ஜி. சாலை, திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள கடைகள் இரவு 8 மணி முதலே அடைக்கப்பட்டு வந்தன. 9 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளையும் அடைக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

அடைக்கப்படாமல் இருந்த கடைகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து போலீஸாா் எடுத்துக் கூறி கடைகளை அடைக்க வைத்தனா்.

இதனால், இரவு 9 மணிக்குப் பிறகு உணவகங்கள், டீ கடைகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்துக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இதேபோன்று, திண்டிவனம், செஞ்சி, அரகண்டநல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன.

இரவு 10 மணிக்குப் பிறகு சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தேவையின்றி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.

இதேபோன்று, தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவையான மருத்துவமனை செல்லவோருக்கும், ரயில் நிலையங்களுக்குச் செல்வோருக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

காய்கறி, பழங்கள், பால் பொருள்கள், பெட்ரோல், டீசல் போன்றவை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இரவு நேர பொது முடக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com