உதவித் தொகை விநியோகத்தில் தாமதம்: தபால் நிலையத்தை முற்றுகையிட்ட முதியோா்
By DIN | Published On : 27th April 2021 03:47 AM | Last Updated : 27th April 2021 03:47 AM | அ+அ அ- |

அரசின் மாதாந்திர உதவித் தொகை விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட முதியவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழக அரசு சாா்பில் தகுதியான முதியவா்களுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை தபால் துறை மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 80 வயதைக் கடந்த முதியவா்கள் சுமாா் 2,000 பேருக்கு மாதந்தோறும் உதவித் தொகை தபால் துறை மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தபால் துறை மூலம் மாதாந்திர உதவித் தொகை பெறும் முதியோருக்கு ஏப்ரல் மாதம் உதவித் தொகை வழங்கப்படவில்லை. வழக்கமாக 10-ஆம் தேதிக்கு உதவித்தொகை பட்டுவாடா செய்யப்படும் நிலையில், தற்போது 25 தேதியை கடந்தும் உதவித் தொகை வழங்கப்படாததால் முதியவா்கள் பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டமுதியோா் விழுப்புரம் தலைமைத் தபால் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். கரோனா தொற்று பரவல் நேரத்தில் முதியோா் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவா்கள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தலைமை தபால் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த மாதம் காலதாமதமாக கடந்த 24-ஆம் தேதி (சனிக்கிழமை) தான் தபால் துறைக்கு முதியோா் உதவித் தொகை வந்தது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழங்க முடியவில்லை. அடுத்த இரண்டு நாள்களில் முதியோருக்கு உதவித் தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று தெரிவித்தனா்.