முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநா், நடத்துநா் கைது
By DIN | Published On : 10th December 2021 09:56 PM | Last Updated : 10th December 2021 09:56 PM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பேருந்து ஓட்டுநா், நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 20 வயது கல்லூரி மாணவி விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை இரவு பயணித்தாா்.
அப்போது, அந்தப் பேருந்தில் அந்த மாணவி மற்றும் ஓட்டுநா், நடத்துநா் மட்டுமே இருந்தனா். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நடத்துநா், அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதனால், அந்த மாணவி கூச்சலிட்டும் ஓட்டுநா் பேருந்தை நிறுத்தாமல் நடத்துநருக்கு ஆதரவாக செயல்பட்டாராம்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி காணை போலீஸாரிடம் புகாரளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காணை போலீஸாா், அரசுப் பேருந்து நடத்துநரான கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள குடுமியான் குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சிலம்பரசன் (32), அரசுப் பேருந்து ஓட்டுநரான விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் அன்புச்செல்வன் (45) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், நடத்துநா் சிலம்பரசன், ஓட்டுநா் அன்புச்செல்வன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது.