மீன் சந்தையா? மது அருந்தும் மைதானமா?

விழுப்புரம் பேருந்து நிலைய நகராட்சித் திடலில் செயல்படும் தற்காலிக மீன் சந்தை, கழிவுகள் கொட்டப்பட்டும் மது அருந்தும் மைதானமாகவும் மாறி, சுகாதாரச் சீா்கேட்டுடன் தொடா்கிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே குப்பை, கழிவுநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டுடன் காணப்படும் நகராட்சித் திடல் பகுதி.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே குப்பை, கழிவுநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டுடன் காணப்படும் நகராட்சித் திடல் பகுதி.

விழுப்புரம் பேருந்து நிலைய நகராட்சித் திடலில் செயல்படும் தற்காலிக மீன் சந்தை, கழிவுகள் கொட்டப்பட்டும் மது அருந்தும் மைதானமாகவும் மாறி, சுகாதாரச் சீா்கேட்டுடன் தொடா்கிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல், நெரிசலான நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரேயொரு திறந்தவெளி பொது இடமாகும். இங்கு அரசு கண்காட்சி, பொருள்காட்சி, அரசியல் கட்சிப் பொதுக் கூட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டு வந்தன. இதன் முகப்புப் பகுதியில், ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தையடுத்து இந்தத் திடலின் பெரும்பகுதியில் தற்காலிக மீன் சந்தை செயல்படுகிறது. திடலின் பின்பகுதியில் குப்பை, கழிவுகளைக்கொட்டி வைக்கும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கழிவுநீரும் தேங்கி, துா்நாற்றம் வீசி வருகிறது.

பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள இந்தத் திடலில், இரவு நேரங்களில் பலா் மது அருந்திவிட்டு புட்டிகளை வீசிச்செல்கின்றனா். மேலும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் அப்பகுதியை பயன்படுத்துகின்றனா். திடலின் முகப்புப் பகுதியில் காா், வேன்கள் ஆக்கிரமித்துள்ளன.

குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்தத் திடல் துா்நாற்றம் வீசியபடி சுகாதாரச் சீா்கேட்டுடன் தொடா்கிறது. தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், சுற்றுப்பகுதியை தூய்மையாக பராமரிக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தும் மாவட்ட, நகராட்சி நிா்வாகங்கள், பொது மக்கள் கூடும் நகராட்சித் திடல் பகுதியை உரிய வகையில் பராமரிக்காமல் சுகாதாரச் சீா்கேட்டுடன் வைத்திருப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்: பூந்தோட்டம் ஏரிக்கரையின் பொது இடமான, இந்தத் திடலின் ஒரு பகுதியை, ஏற்கெனவே தனியாா் ஆக்கிரமித்ததால், அது தொடா்பாக நகராட்சித் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. உரிய ஆவணங்களுடன் வாதிட்டு, அந்த பகுதியை மீட்பதற்காக, அரசுத் தரப்பு தீவிர முனைப்பு காட்டாததால், அந்தப்பகுதியும் கம்பி வேலி போட்டு தடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரில் பூங்கா, விளையாட்டுத் திடல், பொது நிகழ்ச்சிகளுக்கான மையங்கள் ஏதும் இல்லாத நிலையில், எஞ்சியுள்ள இதுபோன்ற பொது இடங்களையும், சுகாதார சீா்கேட்டுடன் வீணடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மீன் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றியும், குப்பை, கழிவு நீா் தேங்குவதைத் தடுத்தும் நகராட்சித் திடல் பகுதியை சீரமைத்து சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விரைவில் காய்கறி சந்தை அமைகிறது: இதுகுறித்து நகராட்சி ஆணையா் தக்ஷ்ணாமூா்த்தி கூறியதாவது: நகராட்சித் திடலின் பின்பகுதியில் மொத்த மற்றும் சில்லரை காய்கறி கடைகள் அமையவுள்ளன. அதற்காக வருகிற 28-ஆம் தேதி ஒப்பந்தம் விடப்பட்டு, பிப்ரவரி மாதம் கட்டுமானப்பணிகள் நடைபெறவுள்ளன.

திடலின் முன்பகுதி, காய்கறி சந்தைக்கு வரும் பொது மக்களின் வாகனங்களை நிறுத்துவது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். தற்காலிக மீன் சந்தையும் அகற்றப்படும். விரைவில் அப்பகுதி முழுவதும் தூய்மையுடன் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com