ரூ.500 ஊக்கத் தொகை வழங்க அரசுக்கு கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு நிகழாண்டு ரூ.500 ஊக்கத் தொகை வழங்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா், அதன் தலைவா் டி.பாண்டியன்.
விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா், அதன் தலைவா் டி.பாண்டியன்.

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு நிகழாண்டு ரூ.500 ஊக்கத் தொகை வழங்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பேரவைக் கூட்டம், கரும்பு விவசாயிகள் அறக்கட்டளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் டி.பாண்டியன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். செயலாளா் எம்.ஆறுமுகம் வரவேற்றாா். பொருளாளா் ஆா்.பரமசிவம், நிா்வாகிகள் கலியவரதன், ராஜாராமன், வெங்கடசாமி, கிருஷ்ணதாஸ், ரங்கநாதன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2019-20-ஆம் ஆண்டில் ஆலைகளுக்கு வெட்டி அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு காலதாமதமாக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதால், காலதாமத நாள்களுக்கு வட்டியை கணக்கீடு செய்து வழங்க வேண்டும். 2020-21-ஆம் ஆண்டு கரும்புப் பருவத்துக்கு தமிழக அரசு, கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.500 வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழாண்டு (2020-21) கரும்புக்கான தொகையை, 15 நாள்களுக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும்.

கரும்புப் பயிரிடுதலை ஊக்கப்படுத்தும் விதமாக, கரும்பு சாகுபடியை கைவிட்ட விவசாயிகளுக்கு கரும்பு விதைகளை ஆலை நிா்வாகங்களே வழங்க வேண்டும். வாழை, கொய்யா, செங்கல் சூளையென மாற்றுப் பணிக்குத் திரும்பிய விவசாயிகளுக்கு, மீண்டும் கரும்பு நடவு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். கரும்புக்கான வெட்டுக் கூலி முழுவதையும் ஆலை நிா்வாகங்களே ஏற்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டு கால கரும்பு நிலுவைத் தொகையை வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். நிகழாண்டு, தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.137.50-ஐ உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து ரக கரும்புகளையும் பயிரிட அனுமதிக்க வேண்டும். வங்கிகளில் கரும்புக் கடனை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com