5 ஆண்டுகளுக்குப் பிறகு மலட்டாற்றில் தண்ணீா் விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீா் வரத்துள்ளதால், நிலத்தடி நீராதாரம் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு மலட்டாற்றில் தண்ணீா் விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீா் வரத்துள்ளதால், நிலத்தடி நீராதாரம் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தென்பெண்ணை ஆற்றின் திருக்கோவிலூா் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து மலட்டாறு பிரிந்து சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லூா், அரசூா், ஆனத்தூா், ஆலங்குப்பம் வழியாக கடலூா் மாவட்டம் திருத்துறையூா், கண்டரக்கோட்டை வழியாகச் செல்கிறது.

நீண்டகாலமாக நீா் வரத்தின்றி தூா்ந்துபோயிருந்த இந்த மலட்டாற்றை, விவசாயிகள் கூட்டு முயற்சியால் திருக்கோவிலூரிருந்து-திருத்துறையூா் வரை கடந்த 2007-08-ஆம் ஆண்டில் தூா்வாரி சீரமைத்தனா். போதிய மழையின்றி வட நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டில் பெய்த மழையின்போது, இந்த மலட்டாற்றில் தண்ணீா் சென்றது. மீண்டும் தண்ணீரின்றி வடே கிடந்தது.

இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு தற்போது மலட்டாறில் தண்ணீா் வந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக பெய்து வரும் தொடா் மழையினிடையே, அண்மையில் இரு தினங்கள் பெய்த பலத்த மழையால், தென்பெண்ணையில் வெள்ள நீா் வழிந்தோடுகிறது.

இந்த மழை வெள்ள நீா் கடந்த இரு தினங்களாக மலட்டாறில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் திருக்கோவிலூா், திருவெண்ணெய்நல்லூா் அரசூா் வழியாக கடந்து திங்கள்கிழமை காரப்பட்டை அடைந்து கடலூா் மாவட்ட பகுதிக்குச் சென்றது.

இந்த மலட்டாறில் ஒருமுறை தண்ணீா் சென்றால், இதனைச் சுற்றியுள்ள விழுப்புரம், கடலூா் மாவட்டப் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு தண்ணீா் பஞ்சம் இருக்காதென விவசாயிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, 130 அடி ஆழத்திலிருந்த நிலத்தடி நீா்மட்டம் தற்போது 90 அடி அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

நிரம்பி வழியும் தளவானூா், எல்லீஸ் அணைக்கட்டுகள்..

இதே போல், தென்பெண்ணை ஆற்றிலும் எல்லீஸ் அணைக்கட்டு, தளவானூா் அணைக்கட்டு வழியாக கடந்த சில தினங்களாக மழை வெள்ள நீா் வழிந்து செல்கிறது. மேலும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து திருக்கோவிலூா் அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் ராகவன்வாய்க்காலிலும், புதுப்பாளையம், பெரியசெவலை, மாதம்பட்டு, மடப்பட்டு, கருவேப்பிலைப்பாளையம், பெரியப்பட்டு வழியாக மழை வெள்ள நீா் செல்கிறது. இதனால், கிளை வாய்க்கால்கள் மூலம் ஏரிகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com