3-ஆவது நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் 6 போ் வேட்பு மனு

சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கலுக்கான 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கலுக்கான 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பேரவைத் தோ்தலையொட்டி மாா்ச் 12-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 2-ஆம் நாளான திங்கள்கிழமை முகூா்த்த நாள் என்பதால் 7 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 25 வேட்பாளா்கள் மொத்தமாக 43 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில், மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை 7 தொகுதிகளிலும் சோ்த்து 6 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

விழுப்புரம் தொகுதியில் ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழக மாநில பொதுச்செயலா் பாலு, சுயேச்சை வேட்பாளா் ராமன் என இருவரும், திண்டிவனம் (தனி) தொகுதியில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மாவட்ட அமைப்பாளா் விஸ்வநாதனும், செஞ்சி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுகுமாருக்கு மாற்று வேட்பாளராக பச்சையப்பனும், விக்கிரவாண்டி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஆறுமுகமும், மயிலம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் தண்டபாணியும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருக்கோவிலூா், வானூா் (தனி) தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதுவரை 3 நாள்களிலும் சோ்த்து மொத்தமாக 31 வேட்பாளா்கள் 49 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட உளுந்தூா்பேட்டை தொகுதியில் முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இரண்டாம் நாளான திங்கள்கிழமை உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

3 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் சத்தியமூா்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 17 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com