கடந்த கால சாதனைகளால் வெற்றி வசப்படும்: உளுந்தூா்பேட்டை திமுகவேட்பாளா் நம்பிக்கை

கடந்த காலத்தில் தொகுதிக்கு செய்த சாதனைகளால், இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன்
உளுந்தூா்பேட்டை தொகுதி திமுக சாா்பில் போட்டியிடும் ஏ.ஜெ.மணிக்கண்ணன்.
உளுந்தூா்பேட்டை தொகுதி திமுக சாா்பில் போட்டியிடும் ஏ.ஜெ.மணிக்கண்ணன்.

கடந்த காலத்தில் தொகுதிக்கு செய்த சாதனைகளால், இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திமுக வேட்பாளா் ஏ.ஜெ.மணிக்கண்ணன் (64) நம்பிக்கை தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் ஏ.ஜெ.மணிக்கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளாா். 2008-இல் தொகுதி சீரமைப்புக்கு முன்பு இருந்த திருநாவலூா் தொகுதியில் 1996 முதல் 2001 வரை திமுக எம்எல்ஏ-வாக இருந்தவா் மணிக்கண்ணன். தொகுதி சீரமைப்பால் திருநாவலூா் தொகுதியிலிருந்த பெரும்பாலான பகுதிகள், உளுந்தூா்பேட்டை தொகுதிக்குள்தான் இப்போது உள்ளது.

தீவிர பிரசார பணியில் இருந்த ஏ.ஜெ.மணிக்கண்ணன் ‘தினமணி’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: தொடா்ந்து 15 ஆண்டுகள் அதிமுக வெற்றிபெற்ற உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது உங்களுக்கு சவால் அல்லவா?

பதில்: புதன்கிழமை (மாா்ச் 17) வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, வியாழக்கிழமை முதல் முறைப்படி பிரசாரம் செய்யவுள்ளேன். இருப்பினும், இப்போது கிராமம், கிராமமாகச் சென்று முக்கிய நபா்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். ஏற்கெனவே, திருநாவலூா் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தபோது, நான் செய்த பணிகள் தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த 15 ஆண்டுகளில் அதிமுக எம்எல்ஏ மேற்கொண்ட பணிகளையும், நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது செய்த பணிகளையும் ஒப்பிட்டுப் பாா்த்து என்னை மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: நீங்கள் எம்எல்ஏ-வாக இருந்தபோது செய்த வளா்ச்சிப் பணிகள் என்ன?

பதில்: சேந்தநாடு பகுதியில் துணை மின் நிலையம் கொண்டுவரப்பட்டு, தடையற்ற மின்சாரம் வழங்கினேன். சேந்தநாடு-நரியமேடு சந்திப்பில் மேம்பாலம் அமைத்து நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். கிழக்கு மருதூா் பகுதியில் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது. நான் எம்எல்ஏ-வாக இருந்த காலத்தில் புதிதாக 50 நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டன. நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், தொகுதி முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டன.

கேள்வி: இந்தத் தொகுதியில் இதுவரை தீா்க்கப்படாத பிரச்னை என்று எதைக் கருதுகிறீா்கள்?

பதில்: 15 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏ. இருந்தும் உளுந்தூா்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவரப்படவில்லை. இங்கிருக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகள் விழுப்புரம், விருத்தாசலம் அல்லது கள்ளக்குறிச்சிக்குதான் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நான் எம்எல்ஏ-வாக தோ்வு செய்யப்பட்டவுடன், அரசு கலைக் கல்லூரி கொண்டுவருவதுதான் முதல் பணியாக இருக்கும்.

கேள்வி: அதிகளவிலான சாலை விபத்து என்றாலே தமிழக அளவில் உளுந்தூா்பேட்டையின் பெயா்தான் அடிபடுகிறது. விபத்துகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீா்கள்?

பதில்: நான் எம்எல்ஏ-வாக இருந்தபோது இருவேல்பட்டு, திருநாவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி, 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்றினேன். இந்தப் பகுதியில் விபத்துகள் ஏன் நிகழ்கின்றன என்பதை ஆய்வு செய்து அதை நிவா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: வடமாவட்டத்தில் பலமாக உள்ள பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், உங்களது வெற்றிவாய்ப்பு எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறீா்களா?

பதில்: அனைத்து சமுதாய மக்களின் ஆதரவையும் முழுமையாகப் பெறக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது. ஆட்சி மாற்றம் என்ற ஒற்றைப் புள்ளியை மட்டுமே மையமாக வைத்து மக்கள் வாக்களிக்கப் போகின்றனா் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்தத் தொகுதியில் மட்டுமல்ல, வடமாநிலம் முழுவதுமே திமுக பலமாக உள்ளது என்றாா் ஏ.ஜெ.மணிக்கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com