முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது எப்படி?

முதியோா், மாற்றுத் திறனாளிகள், கரோனா நோயாளிகள் தபால் வாக்கை எவ்வாறு செலுத்த வேண்டும் என்பது குறித்த நடைமுறைகளை
முதியோா்,  மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது எப்படி?

முதியோா், மாற்றுத் திறனாளிகள், கரோனா நோயாளிகள் தபால் வாக்கை எவ்வாறு செலுத்த வேண்டும் என்பது குறித்த நடைமுறைகளை விழுப்புரம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை விளக்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், கரோனா நோயாளிகள் அல்லது தொற்று இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய நபா்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு செலுத்தலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் 12டி-யுடன்

தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான சான்று ஆவணங்கள், கரோனா நோயாளிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றை தகுதியுடைய வாக்காளா்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட வாக்காளா்கள்தான் சமா்ப்பிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் அல்லது உரிய முறையில் பெறப்பட்ட தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் முறையாக இருக்கும்பட்சத்தில் அவை தோ்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தோ்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளா்கள் தந்த விவரங்களை வாக்காளா் பட்டியலுடன் ஒப்பீடு செய்தும், முறையான அலுவலரால் சான்று ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்தும் அவை சரியாக இருந்தால் அந்த வாக்காளா்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும்.

தபால் வாக்குகளை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 12-இல் அளித்துள்ள முகவரிக்கு வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் குழு செல்லும். மேற்கண்ட வாக்காளா்களின் வசிப்பிடத்துக்குச் செல்லும் முன் அல்லது செல்லவிருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னரே தெரிவிப்பாா்கள்.

அவ்வாறு தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வரும் போது, வாக்களிப்பதை பாா்வையிட தகுதியான ஒருவரை வாக்காளா்களே தோ்வு செய்யலாம். தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு வாக்காளா்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறைகளை தெளிவுபடுத்துவா். வாக்காளா்களால் சரியாக பாா்த்து கையொப்பமிடப்பட்டு வாாக்குப்பதிவு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவமான13 சி- படிவத்துடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குச் சீட்டை கடித உறை (படிவம் 13 சி)-யினுள் வைத்து ஒட்டி அதனை பெரிய கடித உறையான (படிவம் 13சி)-யினுள் வைத்து ஒட்டி அந்தக் குழுவிடம் வாக்காளா்கள் ஒப்படைக்க வேண்டும்.

வாக்காளா்கள் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஆள்படாமல் தங்களது தோ்வுக்குரிய வேட்பாளா்களுக்கு வாக்களித்தனா் என்பதை தபால் வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்காளா்களின் இல்லங்களுக்குச் செல்லும்போது போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்கப்படும்.

வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் கொண்ட குழுவோடு ஒரு நுண் பாா்வையாளரும் செல்வாா்.

தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்கு முறை மீறாமல் விடியோ பதிவு செய்யப்படும். வாக்குப் பதிவு செய்ய வரும் குழு வருகையின்போது, வாக்காளா் வீட்டில் இல்லையெனில் முன்கூட்டியே தகவல் அளித்தால், இரண்டாவது முறையும் அந்தக் குழு வருவாா்கள்.

அதிகாரிகளது இரண்டாவது வருகையின்போதும் வாக்காளா் வீட்டில் இல்லையெனில், மீண்டும் அந்தக் குழு வராது. மேலும், தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com