ரூ.27 கோடியில் நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணிகள்: அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆய்வு

நந்தன் கால்வாயில் ரூ. 27 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சா் செஞ்சிமஸ்தான் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களை அமைச்சா் செஞ்சி மஸ்தானிடம் எடுத்துக் கூறும் பொறியாளா்கள்.
நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களை அமைச்சா் செஞ்சி மஸ்தானிடம் எடுத்துக் கூறும் பொறியாளா்கள்.

நந்தன் கால்வாயில் ரூ. 27 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சா் செஞ்சிமஸ்தான் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நந்தன் கால்வாய்த் திட்டம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவாக இருந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, கால்வாயை சீரமைக்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி ரூ. 27 கோடியை ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கீரனூா் அணைக்கட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம், பனமலை ஏரி வரை உள்ள இந்தக் கால்வாயின் நீளம் 37.880 கி.மீட்டா் ஆகும். இதன் மூலம் இரண்டு மாவட்டங்களிலும் சுமாா் 6598 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

கால்வாயில் சீரமைப்புப் பணி விழுப்புரம் மாவட்ட எல்லையான கொளத்தூா் பகுதியிலிருந்து பனமலைபேட்டை வரை நடைபெற்று வருகிறது.

கால்வாயின் குறுக்கே 6 சிறு பாலங்கள், நல்லாண்பிள்ளைபெற்றாள் சாலபுத்தூா் ஏரி இடையே ஒரு பெரிய பாலம், மற்றும் 2 மதகுகள் அமைக்கும் பணிகளும், நந்தன் கால்வாய் மூலம் தண்ணீா் பெறும் சோ.குப்பம், தேவதானம்பேட்டை, நல்லாண்பிள்ளைபெற்றாள், பாக்கம், மாதப்பூண்டி ஆகிய ஏரிகளின் மதகுகளும் சீரமைக்கப்படவுள்ளன.

மேலும், நந்தன் கால்வாயில் 12 கி.மீ. தொலைவுக்கு சிமென்ட் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் விளை பொருள்களை எடுத்துச் செல்ல வசதியாக கால்வாயின் கரை தாா் சாலையாக மாற்றப்பட உள்ளது. மேலும், பனமலை பேட்டை வரை கால்வாய் தூா் வாரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நல்லாண்பிள்ளைபெற்றாள் அருகே நடைபெற்று வரும் நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணிகளை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், செஞ்சி வட்டாட்சியா் ராஜன், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com