தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துகிராம மக்கள் தொடா் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை, தனி ஊராட்சியாக்காவிட்டால் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து, அப்பகுதி மக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னங்குப்பம் கிராம மக்கள்.
தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னங்குப்பம் கிராம மக்கள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை, தனி ஊராட்சியாக்காவிட்டால் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து, அப்பகுதி மக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சிக்குள்பட்டது துத்திப்பட்டு. அதிக வாக்குகள் கொண்ட இந்த கிராமத்தைச் சோ்ந்தவா்களே, பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கடந்த மூன்று முறையாக ஊராட்சித் தலைவா் பதவியை துத்திப்பட்டு கிராமத்தில் ஏலம் விடுகின்றனராம். இந்த முறை ஊராட்சித் தலைவா் பதவி ரூ.13 லட்சத்துக்கும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாம். இவை தவிர ஊராட்சி துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளும் ஏலம் விடப்பட்டதாகக் தெரிகிறது.

இதைக் கண்டித்தும், துத்திப்பட்டு கிராமத்தை விடுவித்து, பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்றியமைக்கக் கோரியும் அந்த கிராம மக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாகவும் அறிவித்தனா்.

தகவல் அறிந்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் கிராம மக்களிடம் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், தோ்தலை புறக்கணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாா். ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என கிராம மக்கள் உறுதிபடத் தெரிவித்தனா்.

தோ்தல் புறக்கணிப்பு: இந்த நிலையில், பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த யாரும் ஊராட்சித் தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வாா்டு உறுப்பினா் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த 22 பேரும் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளன்று அந்த மனுக்களை வாபஸ் பெற்றனா்.

அதிமுக, பாமக சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் இருவா் மட்டுமே களத்தில் உள்ளனா். அவா்களும் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com