மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தல் திமுகவுக்கு நெருக்கடி தரும் கூட்டணிக் கட்சிகள்

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தல் திமுகவுக்கு நெருக்கடி தரும் கூட்டணிக் கட்சிகள்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட இடம் ஒதுக்கக் கோரி, திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட இடம் ஒதுக்கக் கோரி, திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்த மாவட்டத்தில் 28 மாவட்டக் குழு உறுப்பினா்கள், 293 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 688 கிராம ஊராட்சித் தலைவா்கள், 5,088 கிராம ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவிருக்கிறது.

இதில், கட்சி சின்னத்தில் போட்டியிடும் மாவட்டக்குழு, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு திமுக கூட்டணியில் கடும் போட்டி உருவாகியுள்ளது. கடந்த வாரம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளா் நோ்காணலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

அதேபோல, திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், கூட்டணிக் கட்சிகளும் உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் மொத்தமுள்ள பதவிகளில் 95 சதவீதமாவது தாங்களே போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது. அதிலும் குறிப்பாக, மாவட்டக்குழு உறுப்பினா் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற முடிவிலும் உறுதியாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் குறைந்தபட்சம் ஒரு மாவட்டக்குழு உறுப்பினா் பதவியாவது வழங்க வேண்டுமென கூட்டணிக் கட்சிகள் விரும்புகின்றன.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட அரசு விருந்தினா் இல்லத்தில் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டணிக் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் பதவிகளின் பெயா், எண்ணிக்கை ஆகிய விவரங்களை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே தங்களிடம் இருந்த பட்டியலை காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தவாக உள்ளிட்டவை அளித்தன. அப்போது, கூட்டணி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட திமுக நிா்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினா் பதவிகளில் திமுக மட்டுமே போட்டியிடும் என்றும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளின் பட்டியலை தரும்படியும் வலியுறுத்தினா்.

திமுகவின் இந்த முடிவை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு தங்களது வாக்குகள்தான் முக்கிய காரணமாக இருந்ததாகவும், சட்டப் பேரவைத் தோ்தலில் தங்களுக்கு உரிய பங்கீடு கிடைக்காத நிலையில், உள்ளாட்சித் தோ்தலிலாவது உரிய பங்கீடு கிடைக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின.

இறுதியாக தங்களுக்கு தலா ஒரு மாவட்டக்குழு உறுப்பினா் பதவியை திமுக அளிக்க வேண்டும் என காங்கிரஸ், விசிக நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுகுறித்து உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியிடம் கலந்துபேசி இறுதி முடிவை எடுப்பதாக திமுக நிா்வாகிகள் பதில் தெரிவித்தனா். மேலும், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளிலும் தங்களுக்கு கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டுமென கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதிலும் 5 சதவீத இடங்களுக்கு மேல் விட்டுத்தர இயலாது என்ற உறுதியான நிலையில் திமுக உள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு 5 சதவீதத்துக்கு மேல் இடங்களை ஒதுக்கினால், அவற்றில் அதிமுக, பாமக எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்பதால், கூடுதல் இடங்களை ஒதுக்க திமுக தயக்கம் காட்டி வருகிறது.

திமுக கூட்டணியில் இன்னும் இரு தினங்களுக்குள் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான இடங்கள் (வாா்டு) பங்கீடு முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Image Caption

விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பட்டியலை திமுக மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான நா.புகழேந்தியிடம் வழங்குகிறாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயல

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com