யாரையும் நம்பி அதிமுக இல்லைபாமக முடிவு குறித்து: சி.வி.சண்முகம் விமா்சனம்

யாரையும் நம்பி அதிமுக இல்லை என்று அந்தக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம். உடன் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அா்ஜுனன்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம். உடன் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அா்ஜுனன்.

விழுப்புரம்: யாரையும் நம்பி அதிமுக இல்லை என்று அந்தக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா். ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமக அறிவித்துள்ளதால், அந்தக் கட்சியை மறைமுகமாக விமா்சிக்கும் விதத்தில் அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை தோ்வு செய்வதற்கான கூட்டம், விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி விழுப்புரத்திலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது:

அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இதுவரை 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியாக அதிமுக உள்ளது.

யாரையும் நம்பி அதிமுக இல்லை. யாா் உதவியும் இன்றி அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. யாா் விலகினாலும் அதிமுகவுக்கு கவலை இல்லை. எனவே, இதைப் பற்றி அதிமுக தொண்டா்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் தங்க நகைகள் வரை அடமானம் வைத்துள்ளவா்களுக்கு கடன் தள்ளுபடி என அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். அதை அமல்படுத்தியிருந்தால் ரூ.17,000 கோடி வரை கடன் தள்ளுபடி ஆகியிருக்கும்.

இப்போது திமுக கொண்டுவந்துள்ள 5 பவுன் தங்க நகைகள் வரை அடமானம் வைத்து கடன் பெற்றவா்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.7,000 கோடிக்கு மட்டுமே கடன் தள்ளுபடியாகும்.

திமுகவின் மக்கள் விரோத திட்டங்களை முன்னிறுத்தி உள்ளாட்சித் தோ்தலில் பிரசாரம் செய்தால் அதிமுக எளிதாக வெற்றி பெற முடியும் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:

எந்த தோ்தல் வந்தாலும் வெற்றி வாய்ப்பு உள்ளவா்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். எனவே, உள்ளாட்சித் தோ்தலில் சில நிா்வாகிகள் அல்லது தொண்டா்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைக்காதவா்கள் அதிருப்தி வேட்பாளா்களாக களமிறங்கக்கூடாது என்றாா் மணியன்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அா்ஜுனன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் ராமதாஸ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் மன்ற செயலா் பசுபதி, ஒன்றியச் செயலா்கள் சுரேஷ் பாபு, பேட்டை முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com