விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியும் ஏலம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் போன துத்திப்பட்டு கிராமத்தில், மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையையும் மீறி, ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஊராட்சித் தலைவா் பதவி ஏலம் போன துத்திப்பட்டு கிராமத்தில், மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையையும் மீறி, ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல, விழுப்புரம் அருகே மேலும் ஒரு ஊராட்சித் தலைவா் பதவியும் ஏலம் போனது.

செஞ்சி ஒன்றியம், பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவா் பதவி, அதே ஊராட்சிக்கு உள்பட்ட துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி மங்கைக்கு ரூ. 13 லட்சத்துக்கு கடந்த 17-ஆம் தேதி ஏலம் விடப்பட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன், துத்திப்பட்டு கிராமத்துக்கு சனிக்கிழமை சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரானது மட்டுமல்ல தனி மனித உரிமையையும் பறிப்பதாகும்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துச் சென்றாா். இந்த விவகாரம் தொடா்பாக துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 30 போ் மீது அனந்தபுரம் போலீஸாா் வழக்கும் பதிவு செய்தனா்.

தொடரும் ஏலம்: மாவட்ட ஆட்சியா் எச்சரித்து சென்ற சனிக்கிழமை இரவு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி அலமேலுவுக்கு ஏலத்தில் விடப்பட்டதாம். இதேபோல, விழுப்புரம் அருகே காணையை அடுத்துள்ள சித்தேரி ஊராட்சித் தலைவா் பதவி ரூ.14 லட்சத்துக்கு ஏலம் போனதாம். விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியரின் எச்சரிக்கையையும் மீறி உள்ளாட்சிப் பதவிகள் அடுத்தடுத்து ஏலம் விடப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியா் மீண்டும் எச்சரிக்கை: இதனிடையே, மாவட்ட ஆட்சியா் த.மோகன் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டாலோ, ஏலம் விட முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா். இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் தவறும் அந்தந்தப் பகுதி அலுவலா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com