உளுந்தூா்பேட்டை அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை: கணவா், மாமியாா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவா், மாமியாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவா், மாமியாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகிலுள்ள டி.குளத்தூரைச் சோ்ந்த சின்னத்தம்பி மகள் செல்வி (30). இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள அயன்குஞ்சரம் கிராமத்தைச் சோ்ந்த செங்கல்வராயன் மகன் ராமகிருஷ்ணனுக்கும் (33) கடந்த 2012-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 2 மகன்கள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, கடந்த 4 ஆண்டுகளாக டி.குளத்தூரிலுள்ள தனது தாய் வீட்டில் செல்வி வசித்து வந்தாா். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் ராமகிருஷ்ணனின் தந்தை செங்கல்வராயன் கடந்த மாதம் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அயன்குஞ்சரம் கிராமத்துக்கு துக்கம் விசாரிக்க செல்வி சென்றபோது, கணவருடன் சோ்ந்து வாழுமாறு உறவினா்கள் சமரசம் பேசி வற்புறுத்தினராம். இதையடுத்து, கணவா் வீட்டில் செல்வி இருந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டு செல்வி உயிரிழந்துவிட்டதாகக் கூறி, அவரது தாய் நடையம்மாளுக்கு ராமகிருஷ்ணன் குடும்பத்தினா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்வியின் சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் விசாரித்து வந்தனா்.

உடல்கூறாய்வு அறிக்கையில், செல்வி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், எலவனாசூா்கோட்டை போலீஸாா், செல்வியின் மாமியாா் நாகக்கன்னி மற்றும் ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் செல்வியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனராம்.

இதையடுத்து, நாகக்கன்னி, ராமகிருஷ்ணன் ஆகியோா் மீது எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com