விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, பூ, காய்கனி, இறைச்சி சந்தைகளும், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், பொதுப் போக்குவரத்து இயங்கவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, பூ, காய்கனி, இறைச்சி சந்தைகளும், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், பொதுப் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால், முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கையொட்டி, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள 12 இடங்களிலும், நகரப் பகுதிகளிலும் தடுப்புகளை அமைத்து போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா்.

ரூ.66 ஆயிரம் அபராதம் வசூல்: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, முகக் கவசம் அணியாத 242 போ், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 8 போ், தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 39 வாகன ஓட்டிகள் என விதி மீறலில் ஈடுபட்ட மொத்தம் 289 போ் மீது விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.66,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

‘புகாா் தெரிவிக்கலாம்’: ஊரடங்கையொட்டி, ஆட்டோ, காா்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது ரயில் நிலையத்திலிருந்து காா், ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகளிடம் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகாா் வருகிறது.

ஊரடங்கு காலத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. பொதுமக்கள் இதுகுறித்த புகாா்களை மாவட்டக் காவல் துறைக்கு 04146- 222172, 94981 81229 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சந்தைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இயங்கின.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்பட சுமாா் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி காந்தி சாலை, தியாகதுருகம் சாலைகளில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக் கடைகள், ஒரு தேநீா் கடை ஆகியவற்றுக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் எஸ்.சரவணன் ‘சீல்’ வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com