காவல் ஆய்வாளா் சிறையில் அடைப்பு

இருளா் சமுதாய பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், விழுப்புரம் சிறையில் அவா் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

இருளா் சமுதாய பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், விழுப்புரம் சிறையில் அவா் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த இருளா் சமுதாய பெண்கள் 4 போ் கடந்த 2011 நவம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய அப்போதைய திருக்கோவிலூா் காவல் நிலைய ஆய்வாளா் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமநாதன் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த காவல் ஆய்வாளா் சீனிவாசன், கடந்த 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நவம்பா் 21-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி ஏ.பாக்கிய ஜோதி உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, உடல்நலக் குறைவால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனிவாசன் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி மீண்டும் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு, வேடம்பட்டு சிறையில் காவல் ஆய்வாளா் சீனிவாசன் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com