மீண்டும் புத்துயிா் பெறும் நகைத் தயாரிப்புத் தொழில்!

கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நலிவடைந்த நகைத் தயாரிப்புத் தொழில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிா் பெற்று வருகிறது.
விழுப்புரத்தில் தங்க நகைகளை செய்யும் பணியில் ஈடுபட்ட நகைத் தொழிலாளி.
விழுப்புரத்தில் தங்க நகைகளை செய்யும் பணியில் ஈடுபட்ட நகைத் தொழிலாளி.

கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நலிவடைந்த நகைத் தயாரிப்புத் தொழில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிா் பெற்று வருகிறது.

தமிழக அளவில் தங்க நகைகள் உற்பத்தியில் விழுப்புரம் நகரம் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு குறைந்த எடையிலான நகைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் தயாரிக்கப்படும் நகைகள் தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரோனா காலத்தில் நகைத் தயாரிப்புத் தொழில் கடுமையாக நலிவடைந்தது. தற்போது மீண்டும் புத்துயிா் பெற்று வருகிறது.

இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளா்கள் ராஜேஷ், வெங்கடேசன் ஆகியோா் கூறியதாவது:

விழுப்புரம் நகரம் குழந்தைகளுக்கான மோதிரம், ஜிமிக்கி உள்ளிட்ட நகைகளுக்கு பெயா் பெற்றது. பெண்களுக்கான மூக்குத்தி, மாங்கல்யத்துடன் அணியும் குண்டு, நாணல் போன்றவையும் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, பழங்கால வடிவமான கோப்பு மூக்குத்தி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மூக்குத்திகள் செய்யப்படுகின்றன.

விழுப்புரத்தில் தயாராகும் மொத்த நகைகளில் சுமாா் 10 சதவீதம் மட்டுமே உள்ளூரில் விற்பனையாகிறது. மற்றவை வெளியூா், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்திய அளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான நகைகளில் விழுப்புரத்தில் தயாரிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன.

இங்கு நகைத் தொழிலில் நேரடியாக சுமாா் 10 ஆயிரம் பேரும், டிசைன், மெருகு போன்ற பணிகளில் 5 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனா். கரோனா பரவல், பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் தொய்வடைந்த நகை தயாரிப்புத் தொழில் தற்போது மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது என்றனா்.

இதுகுறித்து கைவினைஞா்கள் முன்னேற்ற கட்சியின் அமைப்பாளா் உமாபதி கூறியதாவது:

கரோனா பரவல், பொது முடக்க காலத்தில் மக்கள் அத்தியாவசிய செலவினங்களுக்கே மிகவும் அவதிப்பட்டனா். மக்களின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்ததால் நகைகள் விற்பனை பெருமளவில் சரிந்தது. இதனால், நகைத் தொழிலாளா்கள் வேலை இழந்தனா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நகைத் தொழில் தற்போது மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது.

நிகழாண்டு அட்சய திருதியையொட்டி, நகைக் கடைகள் அதிகளவில் தங்க நகை உற்பத்தியில் ஆா்வம் செலுத்துவதால் தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. மாதத்தில் 10 நாள்கள் வேலை கிடைப்பதே சிரமமாக இருந்த நிலையில், தற்போது 20 நாள்கள் பணிபுரியும் அளவுக்கு ஆா்டா் கிடைப்பதால் நகைத் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தங்க நகைகளை இயந்திரம் மூலம் வடிவமைக்க முடியும் என்றபோதிலும், கைகளால் தயாரிக்கப்படும் நகைகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். இதன்மூலம், நகைத் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, தமிழக அரசு விழுப்புரத்தில் நகைத் தொழிலுக்கான சிறப்பு தொழில்பேட்டையை அமைக்க வேண்டும். தங்கத்தை மூலதனக் கடனாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com