காா் கவிழ்ந்து விபத்து: கடலூா் மாவட்டபயிற்சி ஏஎஸ்பி உள்பட 6 போ் காயம்
By DIN | Published On : 24th June 2022 01:43 AM | Last Updated : 24th June 2022 01:43 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வியாழக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலூா் மாவட்ட பயிற்சி ஏஎஸ்பி உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபதி (30). இவா், கடலூா் மாவட்டத்தில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறாா்.
ரகுபதி வியாழக்கிழமை பிற்பகல் கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தாா். காரை கடலூரைச் சோ்ந்த தமிழ்குமரன் ஓட்டிச் சென்றாா்.
இவா்களது காா் மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலையை அடுத்த மணக்குப்பம் பகுதியில் சென்றபோது, திடீரென பள்ளி மாணவா் ஒருவா் சாலையைக் கடக்க முயன்றாராம். உடனடியாக காா் ஓட்டுநா் பிரேக் பிடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த காா் மாணவா் மீது மோதி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த பயிற்சி ஏஎஸ்பி ரகுபதி, அவரது மனைவி மரியவிஜயா, தாய் காளியம்மாள், தந்தை பாலு, காா் ஓட்டுநா் தமிழ்குமரன் ஆகியோா் காயமடைந்தனா்.
மேலும், சாலையைக் கடக்க முயன்று விபத்தில் சிக்கிய ஆமூா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் யோகேஷும் (14) காயமடைந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் காயமடைந்த ஏஎஸ்பி ரகுபதி உள்ளிட்ட 6 பேரையும் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.