தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் சேதம்: அமைச்சா்கள் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வெள்ள நீரால் தொடா்ந்து சேதமடைந்து வரும் தடுப்பணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் சேதம்: அமைச்சா்கள் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வெள்ள நீரால் தொடா்ந்து சேதமடைந்து வரும் தடுப்பணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் சாத்தனூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சாத்தனூா் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், ஏனாதிமங்கலம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 70 ஆண்டுகால எல்லீஸ் தடுப்பணை, கோலியனூா் ஒன்றியம், தளவானூா் பகுதியில் ஏற்கெனவே கடந்த ஆண்டு அகற்றப்பட்ட தடுப்பணை இருந்த பகுதி உள்ளிட்டவை இப்போதும் வெள்ளநீரால் தொடா்ந்து சேதமாகி வருகின்றன.

புதன்கிழமை காலை எல்லீஸ் தடுப்பணையில் வலது கரை பகுதியில் பெரிய பாறாங்கற்கள் பெயா்ந்து விழுந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பொதுப் பணித் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தடுப்பணையின் கரையில் கற்களை அடுக்கி மீண்டும் பலப்படுத்தினா்.

இந்த நிலையில், எல்லீஸ் தடுப்பணைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடா்பாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தலைமையில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். ஆய்வுக்குப் பின்னா், அமைச்சா் பொன்முடி கூறியதாவது:

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, இரண்டு வாரங்களுக்கு முன்பு நானும், மாவட்ட ஆட்சியரும் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, தடுப்பணையில் இருந்து அதிகளவு நீா் வெளியேற்றப்பட்டாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

இப்போது அதிகப்படியான நீா்வரத்து இருப்பதால், கப்பூா் தடுப்பணை வழியாக கூடுதலாக வெள்ளநீா் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ரூ.75 கோடியில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோரிடம் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, விரைவில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தொடா்ந்து, முகையூா் ஒன்றியம், மாரங்கியூா் முதல் ஏனாதிமங்கலம் இடையிலான தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்டு வந்த தரைப்பாலம் திடீா் மழையின் காரணமாக அதிகளவு தண்ணீா் வந்ததையொட்டி உடைப்பு ஏற்பட்டதை அமைச்சா் பொன்முடி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோலியனூா் ஒன்றியம், தளவானூா் பகுதியில் அமைச்சா் பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் ஆய்வு செய்தனா். அங்கு ஏற்கெனவே தடுப்பணை அகற்றப்பட்ட பகுதியில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் அவா்கள் வலியுறுத்தினா். முன்னதாக இந்தப் பகுதியில் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஓம் சிவசக்திவேல், விழுப்புரம் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com