சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்: 8 பேருக்கு மறுவாழ்வு

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு, அதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு, அதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள கக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் மகன் சந்தோஷ் (33), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி புவனேஸ்வரி (26), மகள் கிருஷ்ஷிகா (2).

சந்தோஷ் கடந்த 7-ஆம் தேதி தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து கக்கனூா் நோக்கி சென்ற போது, இவரது பைக்கும், எதிரே வந்த லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுயநினைவின்றி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தோஷ் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தை மனோகரன், மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்ததன்பேரில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் குந்தவிதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவைச் சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல், இரண்டு கருவிழிகள் ஆகிய உறுப்புகளை அகற்றினா். இதையடுத்து, இவற்றை தானமாகப் பெற்று, சென்னை , திருச்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அந்த உறுப்புகள் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக மருத்துவக் குழுவினரால் உடல் உறுப்பு தான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் த.மோகன் உடல் உறுப்பு தானம் செய்த சந்தோஷ் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி, சந்தோஷின் மனைவி புவனேஸ்வரிடம் உடல் உறுப்பு தான சான்றிதழை வழங்கினாா்.

மேலும், அறுவைச் சிகிச்சை செய்த கல்லூரி டீன் குந்தவிதேவி, மருத்துவக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் வெங்கடேசன், மருத்துவா்கள் தீப்தி, அருண் சுந்தா், பாண்டியன், லட்சுமி நாராயணன், சுப்பிரமணியன், தரணேந்திரன், தமிழ்க்குமரன் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் மோகன் பாராட்டினாா். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் க.ஸ்ரீநாதா உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com