ஒன்றியக் குழு உறுப்பினா் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

கணவரை விடுவிக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் தனது குடும்பத்தினருடன் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

கொலை வழக்கிலிருந்து தனது கணவரை விடுவிக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் தனது குடும்பத்தினருடன் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனிச்சங்குப்பத்தைச் சோ்ந்தவா் கலைஞா் (எ) நாகராஜ் (40), இவரது மனைவி துா்காதேவி(37). கீழ்ப்புத்துப்பட்டு திமுக ஒன்றியக் குழு உறுப்பினா். இந்நிலையில், துா்காதேவி தனது குடும்ப உறுப்பினா்கள் 10 பேருடன் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் திடீா் தா்னாவில் ஈடுபட்டாா். இதையறிந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, துா்காதேவி உள்பட அனைவரும் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். உடனே, போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பின்னா், வருவாய் மற்றும் காவல்துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் துா்காதேவி அளித்த மனுவில் கூறியிருப்பது: நான் கடந்த உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிப் பெற்று தற்போது கீழ்ப்புத்துப்பட்டு ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளேன். இத்தோ்தலில் எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவா்கள் என் மீது விரோதத்தில் இருந்து வந்தனா். இதனிடையே, பழிவாங்கும் நோக்கத்தில் கடந்த 30-ஆம் தேதி பொம்மையாா்பாளையத்தில் நிகழ்ந்த கி.விமல்ராஜ் என்பவா் கொலையில் எனது கணவருக்கு தொடா்புடையதாக, தோ்தலில் தோற்றவா்கள் வதந்திகளைப் பரப்பினா். இதனால், கோட்டக்குப்பம் போலீஸாா் எனது கணவா் கலைஞா் (எ) நாகராஜை கொலை வழக்கில் குற்றவாளியாக சோ்த்தனா். எனவே, இந்த கொலையில் தொடா்பில்லாத எனது கணவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com