மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: 58 போ் கைது

விழுப்புரம் மாவட்டம் செவலபுரை கிராமத்தினா் வீட்டுமனைப் பட்டா கோரி தட்டுமுட்டு சாமான்களுடன் மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் செவலபுரை கிராமத்தினா் வீட்டுமனைப் பட்டா கோரி தட்டுமுட்டு சாமான்களுடன் மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபடமுயன்றதாக 58 பேரை வளத்தி போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செவலபுரை திரெளபதி அம்மன் கோயில் குளத்தை சுற்றியுள்ள நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 150-க்கும் மேற்பட்டோா் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனா்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி துக்காராம் என்பவா் சென்னை உயா்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி அகற்றப்பட்டன.

இதில் தகுதியான 18 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக வட்டாட்சியா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மற்றவா்கள் வீடுகளை இழந்த அனைவருக்கும் மனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலா் டி.முருகன், மாநிலக் குழு உறுப்பினா் ரவீந்திரன், மாவட்ட செயலா் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், எய்யில் ராஜா ஆகியோரின் ஒத்துழைப்புடன் சென்று மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த வளத்தி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். முதல்கட்டமாக 18 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாகவும், மற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் பேசி பெற்றுத் தருவதாக கூறப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்ததால் 58 பேரை வளத்தி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com