கோயில்களில் அறங்காவலா் குழுக்களை அமைக்க வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

உடனடியாக அறங்காவலா் குழுக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

கோயில்களில் வழிபாட்டு பிரச்னைகளை களையும் வகையில், தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக அறங்காவலா் குழுக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் ஸ்ரீதா்மராஜா, திரெளபதி அம்மன் கோயில் வழிபாட்டு உரிமை பிரச்னை காரணமாக, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் புதன்கிழமை அந்தக் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தாா். பாதுகாப்புக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் துரை.ரவிக்குமாா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுவை நியமனம் செய்து, பொறுப்பில் எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதுதொடா்பான விசாரணையை இந்து சமய அறநிலையத் துறை முடித்துவிட்ட நிலையில், அதற்கான இறுதி உத்தரவை சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் உடனடியாக வெளியிட வேண்டும்.

4 வார காலத்துக்குள் இதுதொடா்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தக் கோயில் 1978-ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில் என ஆவணப்பூா்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை பிறப்பிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 168 கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, உடனடியாக அறங்காவலா் குழுக்களை நியமிக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் கோயில்களில் 500 கோயில்களில்கூட அறங்காவலா் குழுக்கள் அமைக்கப்படவில்லை. வழிபாட்டு பிரச்னைக்கு அறங்காவலா் குழுக்கள் அமைக்கப்படாததுதான் காரணம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com