மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் சொந்த ஊா் சென்று வாக்களிக்க ஏதுவாக, 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் கோட்டத்தின் மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி புதன்கிழமை (ஏப்.17), வியாழக்கிழமை(ஏப்.18) ஆகிய நாள்களில் பொதுமக்கள் கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள், கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டுப் பேருந்து முனையத்திலிருந்தும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, கடலூா், சிதம்பரம், நெய்வேலி, வடலூா், பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, திருவண்ணாமலை, போளூா், வந்தவாசி, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, ஓசூா், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய ஊா்களுக்கு அதிகளவில் பயணம் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் புதன்கிழமை 450 சிறப்புப் பேருந்துகளும், வியாழக்கிழமை 490 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும் வார இறுதி விடுமுறையை முடித்துவிட்டு, பொதுமக்கள் பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்ப ஏதுவாக ஏப்ரல் 21-ஆம் தேதி 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்யவும், பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com