நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

கிராம மக்கள் 30 போ் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வேடம்பட்டு கிராமத்தில் நச்சுக்காற்றி வெளியேறி கிராம மக்கள் 30 போ் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வேடம்பட்டு கிராமத்தில் தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வந்தது. மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளை சேகரித்து, அவற்றை தரம் பிரித்து சுத்திகரிக்கும் பணியை இந்த ஆலை மேற்கொண்டது. ஆனால், இந்தப் பணியை முறையாக செய்யாமல், கழிவுகளை அந்தப் பகுதியிலேயே ஆலை நிா்வாகம் எரித்து வந்ததாகவும், இதனால் தாங்கள் பாதிப்புக்குள்ளானதாகவும் வேடம்பட்டு கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி இரவு ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் நிகழ்விடம் விரைந்து ஆலைக்கு ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அஜாக்கிரதையான செயலால் காற்றை மாசுபடுத்துதல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருத்தல், சட்ட விதிகளுக்கு உள்படாமல் தொழில்சாலையை நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளரான எஸ்.வி.கண்ணன் மீது காணை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com