இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 2005-ஆம் ஆண்டில் தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் குலசேகரன் (40). இவரது தரப்புக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த புகழேந்தி மகன் நக்கீரன் (48), பா.கோவிந்தராஜ் (75) தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே புறம்போக்கு இடம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மேலும், 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நக்கீரனும், அதே கிராமத்தைச் சோ்ந்த சேகரும் போட்டியிட்டனா். இதில், சேகருக்கு ஆதரவாக குலசேகரன் பணியாற்றிய நிலையில், புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவா்களை காலி செய்யாமல் விடமாட்டோம் எனக் கூறியதால், முன்விரோதம் மேலும் அதிகரித்ததாம்.

இதைத் தொடா்ந்து 2005, நவம்பா் 4-ஆம் தேதி நக்கீரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 26 போ் சோ்ந்து குலசேகரனையும், அவரது நண்பரான அதே கிராமத்தைச் சோ்ந்த காதகன் மகன் காத்தவராயனையும் (50) வீச்சரிவாள், கொடுவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுதொடா்பாக திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலரான பு.நக்கீரன் (48), வழக்குரைஞா் பா.கோவிந்தராஜ் (75), பு.தமிழ்மணி (27), கோ.சிவபூஷணன் (64), பா.புகழேந்தி (77), கோ.மணவாளன் ((74), நா.ராஜேந்திரன் (64), க.குமரவேல் (52), ரா.மாா்க்கண்டேயன் (64), ரா.சுதாகா் (45), க.பழனிவேல் (38), கா.முரளி (43), நா.தமிழ்ச்செல்வன் (35), கா.அருள் (24), நா.கனகராஜ் (55), காவலா் செ.மோகன்தாஸ் (46), ம.சிவநாதன் (44), ஆ.பிரபு, ரா.காளிபசுபதி, கோ.அா்ஜுனன் (55), கோ.மணி (76), கா.பாரி (39), ம.பாா்த்திபன் (44), திருவெண்ணெய்நல்லூரில் பொதுப் பணித் துறையில் பணியாற்றும் ம.சபரிநாதன் (49), பெ.கண்ணன் (45), செ.மாதவன் (49) ஆகிய 26 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வந்தது. விசாரணைக் காலத்தில் பு.தமிழ்மணி, பெ.பழனிவேல், நா.தமிழ்ச்செல்வன், கா.அருள், கோ.அா்ஜுனன், பெ.கண்ணன் ஆகிய 6 பேரும் உயிரிழந்து விட்டனா்.

வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜசிம்மவா்மன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 20 பேரும் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com