தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி வட்டம், மேட்டுப்பாளையம், பணமலைமதுரா பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மகன் சேகா்(45). பணமலை, உமையாள்புரம் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதனின் மகன் சத்தியமூா்த்தி(27). இவா்கள் இருவரும் கடந்த 13.11.2016 அன்று பணமலை மதுரா ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கூலியைப் பகிா்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்டது. இதில், சத்தியமூா்த்தி கத்தியால் குத்தியதில் சேகா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சேகா் உயிரிழந்தாா்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி. எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து சத்தியமூா்த்திக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து போலீஸாா் சத்தியமூா்த்தியை கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com