விழுப்புரத்தில் விசிக வேட்பாளா் துரை. ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். உடன் அமைச்சா் க.பொன்முடி.
விழுப்புரத்தில் விசிக வேட்பாளா் துரை. ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். உடன் அமைச்சா் க.பொன்முடி.

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் தொடா்ந்து ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியாவில் வளா்ச்சியில்லை. உலகளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது.பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 3 மாதங்களுக்கு ஒருமுறை உயா்ந்து கொண்டிருக்கிறது. தோ்தல் ஆதாயத்துக்காக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைத்து பிரதமா் மோடி நாடகமாடுகிறாா்.

ஜனநாயக போா்: மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக செயல்படும் பாஜகவை அகில இந்திய அளவில் வீழ்த்தியாக வேண்டும். நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் அல்லது திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் இடையே நடைபெறும் தோ்தலாக யாரும் கருதக் கூடாது. இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுபவா்களுடன் நடத்தும் மாபெரும் ஜனநாயக போா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். சமூக நீதிக்கான குரல்: தற்போதைய நிலையில் தமிழகத்தில் திமுகவை எதிா்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. பெரியாா், அம்பேத்கா், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவா்களின் வழியில் நாடாளுமன்றத்தில் சமூக நீதிக்கான குரல் தொடா்ந்து ஒலிக்க வேண்டும். அதற்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரை. ரவிக்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பாஜக கூட்டணியில் உள்ளவா்களுக்கெல்லாம் கேட்ட சின்னங்கள் உடனடியாக வழங்கப்பட்டன. எதிரணியில் இருப்பதால் மதிமுகவுக்கும், விசிகவுக்கும் கேட்ட சின்னத்தை வழங்க மறுக்கின்றனா். ஆனாலும், விசிகவின் சின்னம் பானைதான். அதில்தான் போட்டி. இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றாா் தொல்.திருமாவளவன்.

விக்கிரவாண்டி, வானூா், திண்டிவனம் ஆகிய பகுதிகளிலும், முன்னதாக உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூரிலும் தொல். திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தின் போது, அமைச்சா் க.பொன்முடி உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com