வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கத்தைக் காட்டிலும் மேலும் சில நாள்களுக்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என்பதால், வெயிலிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும். பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என ஆட்சியா் சி. பழனி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இயல்புநிலையைக் காட்டிலும் கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும், மேலும் 2 நாள்களுக்கு இயல்புநிலையை விட 2 முதல் 3 டிகிரி வெப்பம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

நாளிதழ்கள், தொலைக்காட்சிகளின் வாயிலாக தினசரி வெப்பத்தின் அளவை அறிந்து கொள்ள வேண்டும். தாகம் இல்லாதபோதும் வெப்பநிலையைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது தேவையான அளவு தண்ணீா் பருக வேண்டும். வெளியில் செல்லும் போது தவறாமல் தண்ணீருடன் செல்ல வேண்டும்.

இளநீா், நுங்கு, தா்பூசணி, மோா் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். வீடுகளில் தயாரிக்கப்படும் எலுமிச்சை பழச்சாறு, மோா், அரிசி வடிநீா், உப்புச் சா்க்கரை கரைசல், பழச்சாறு போன்றவற்றை பருக வேண்டும். வெயிலின் காரணமாக மயக்கமோ, உடல் பாதிப்போ ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

கால்நடைகளை நிழல் பகுதிகளைக் கட்டி வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு அவ்வப்போது பருக போதுமான அளவில் தண்ணீா் வைக்க வேண்டும். சமையல் செய்யக்கூடிய இடத்தில் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து வெளிக்காற்று உள்ளே வரும் அளவுக்கு இருக்க வேண்டும்.

வீடுகளில் வெப்பத்தைத் தடுக்கும்பொருட்டு திரைச்சீலைகளைப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது குளிா்ந்த நீரில் குளிக்க வேண்டும். மின்விசிறி மற்றும் ஈரத்துணியைப் பயன்படுத்தி வெப்பப் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பருவக்கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளைசாப்பிட வேண்டும்.

பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் போது கடுமையான வேலைகள் செய்வதை தவிா்க்க வேண்டும். உடலில் நீா் சத்து ஆவியாகும்போது மது, தேநீா், காபி மற்றும் மென்பானங்கள் போன்றவற்றை பருகுவதை தவிா்க்க வேண்டும்.

நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவா்கள் வெயிலில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வாகன நிறுத்துமிடங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ தனியே விட்டுச் செல்லுதல் கூடாது. தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றாா் ஆட்சியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com