உறுத்தல்கள்!

ஆறே மாதத்தில் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்'; "இந்தியில் உரையாட நாலே மாதம்' போன்ற விளம்பரங்கள் பல இப்போது தென்படுகின்றன. ஏன் பிற வெளிநாட்டு மொழிகளைச் சொல்லித் தரவும் (குறிப்பாக ஜப்பானிய பிரெஞ்ச்)
Updated on
2 min read

ஆறே மாதத்தில் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்'; "இந்தியில் உரையாட நாலே மாதம்' போன்ற விளம்பரங்கள் பல இப்போது தென்படுகின்றன. ஏன் பிற வெளிநாட்டு மொழிகளைச் சொல்லித் தரவும் (குறிப்பாக ஜப்பானிய பிரெஞ்ச்) நிறுவனங்கள் இருக்கின்றன.

 அயல்நாட்டில் வேலை பெறுவதற்கும், தமிழ்நாடல்லாத பிற மாநிலங்களில் பணிபுரியவும், துணை நிற்கிற சாதனங்கள் இந்த பிற மொழி ஞானம் என்பது வெளிப்படை.

போகட்டும். தாய்மொழி அல்லாத பிற மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றால், அது ஒரு கூடுதல் தகுதிதான். ஆனால், தமிழ்நாட்டிலேயே தமிழை முறையாகப் பேச, எழுத எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது என்பது சோகமான கேள்வி. பேச்சுத் தமிழ்  மாவட்டம்தோறும் மாறுபடுகிறது.

 "பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் உள்ளது போல் வேறுபாடு, வேறெங்குமே இல்லை' என்று ஒரு அன்பர் கருத்துத் தெரிவித்தார். இது சரியானதல்ல. ஏனெனில், பிற மாநிலங்களிலுள்ள பற்பல இடங்களில் உள்ள பேச்சுத் தன்மை, நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குரல் ஏற்ற இறக்கம்; சில வகைச் சொற் பிரயோகங்கள் உண்டு. காக்கிநாடா பகுதியில் புழங்கும் தெலுங்குக்கும், ஹைதராபாத் தெலுங்குக்கும் வேறுபாடு உண்டு.

 தமிழ்நாட்டில் உரையாடலின்போது ஆங்கிலம் கலப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. இதிலுள்ள மூல காரணமான அரசியலை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் நடைமுறை உண்மை அதுதான். அதே சமயம், தமிழ்நாட்டு சுவரொட்டியிலுள்ள "பெரிய எழுத்து' வார்த்தைகள் கண்ணை உறுத்துகின்றன. மேலும் தமிழ்ப் பெயர்ப் பலகை என்பது ஓர் அவசியமாக ஆன பிறகு, உறுத்தல் மிக அதிகமாகி விட்டது.

 சில ஆண்டுகளுக்கு முன், "தமிழகத்தின் குறலோவியமே' என்ற விளம்பரத்தை முதல்வரின் புகைப்படத்துடன் பார்க்க நேர்ந்தது. "குறளோவியம்' வெளியான தருணம் அது. தொண்டரின் ஆர்வக் கோளாறினால் "ள', "ல' ஆகி விட்டது. அண்மைக் கால பெயர்ப் பலகைகள் பல அபத்தமானவையாயும், சற்றும் புரிபடாமலும், விபரீத பொருள் தருவதாகவும் காட்சியளிக்கின்றன.

 "பழச் சாரு அகம்' வீட்டு அறை கலன்கள், புரியாமல் காட்சி தரும் ஒரு பெயர்ப் பலகை-எம்.ஸி., தோழமையகம்!

 மேலே குறிப்பிட்ட பலகையை நோக்கியவுடன், புதிதாக முளைத்த அரசியல் கட்சியின் அறையோ என்று தோன்றியது. சற்று நெருங்கிப் பார்த்தால் அது "எம்.ஸி. அசோஸியேட்ஸின்' மொழி பெயர்ப்பு!

 முற்றிலும் விபரீதமான பொருள் தரும் பெயர்ப் பலகை ஒன்றுண்டு. அதுவும் இந்தக் கால வெடிகுண்டு கலாசாரத்தில்! முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே வீட்டுக்குத் தேவையான குளியலறை சாதனங்கள், கருவிகள், குழாய் இணைப்புப் பொருள்கள் விற்கும் கடைக்கு "ஹார்டுவேர்ஸ்' என்றுதான் பெயர். அரசு ஆணையான "தமிழ்ப்பலகை'யில் அது "வன் பொருள்' ஆக மாறிவிட்டது.

 கணினி நுழைவுக்குப் பிறகு, சாஃப்ட்வேர் என்பதற்கு மென்பொருள் பொருத்தமான சொல்.

முற்றிலும் தமிழ் பயன்படுத்துகிறோம் என்று அறிவிக்கிற ஓர் ஊடகம் "கடவுச் சீட்டு' என்று கூறுகிறது.

யதார்த்தத்தில் தென் கோடியில் வசிக்கும் கிராம வாசிக்குக் கூட பாஸ்போர்ட் என்றால் புரியும். ஏன் அனுமதிச் சீட்டு, நுழைவுச் சீட்டு (விசா) என்ற சொற்களை உபயோகிக்கலாமே?

 வளாகம், ஊடகம், மின்னணு, அங்காடி போன்ற தமிழ் வார்த்தைகள் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடல்லாமல், பொருத்தமாகவும் இருக்கின்றன. அது போல் "எழுத்துரு' "பாண்ட்'

 தொண்டர்களின் ஆவேச ஆர்வம்; அரசு ஆணையை அவசரமாக நிறைவேற்றியதால் புலப்படும் அலங்கோலங்கள்- இவற்றை விட்டு விடுவோம். ஆனால் காவல்துறையின் அரசு விளம்பரத்திலேயே இத்தகைய எழுத்துப் பிழை காணப்பட்டால்?

"உங்கள் குழந்தைகளை அரிமுகம் இல்லாத பேரிடம் பேசுவதை தவிர்க்கச் சொல்லவும்' அது என்ன "அரிமுகம்'?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com