நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களும் ஊழியர்களின் நிலையும்

கூட்டுறவு இயக்கம்தான் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வேறு எந்த இயக்கத்தையும்விட அதிகம் பங்காற்றக்கூடிய வலுவையும் ஆதரவையும் பெற்ற இயக்கமாகும். இந்தியாவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு கூட்டுறவுச் சங்
நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களும் ஊழியர்களின் நிலையும்
Published on
Updated on
2 min read

கூட்டுறவு இயக்கம்தான் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வேறு எந்த இயக்கத்தையும்விட அதிகம் பங்காற்றக்கூடிய வலுவையும் ஆதரவையும் பெற்ற இயக்கமாகும்.

இந்தியாவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நலிந்த மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் அமைப்புகளில் கூட்டுறவு அமைப்புகள் பிரதான பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் கடந்த 35 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. எனவே, அரசுத்துறை போல் அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது. ஆனால், அதில் பணிபுரியும் ஊழியர்கள் கூட்டுறவு சங்க சட்டதிட்டங்களுக்கு உள்பட்டவர்கள்.

பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி கிலோ 1க்கு 0.45 பைசா, சர்க்கரை 0.12 பைசா மண்ணெண்ணெய் 1 லிட்டருக்கு 0.45 பைசா என லாபம் நிர்ணயித்து கூட்டுறவு கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவினியோகத் திட்டத்தை முழுமையாக 1981-ம் ஆண்டு முதல் அரசு கூட்டுறவு அமைப்புகளின் தலையில் சுமத்தியதால் பலகோடி ரூபாய் நஷ்டத்துக்குள் தள்ளப்பட்டன.

அதன் காரணமாக, இந்த அமைப்புகளில் பணிபுரிந்து ஊழியர்களுக்கு நஷ்டத்தைக் காரணம்காட்டி ஊதியத்தை உயர்த்தாமலும் ஊதிய ஒப்பந்த காலங்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டித்த காரணத்தால் மிகவும் குறைவான ஊதியம் பெற்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளாகப் பொதுவினியோகத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் இழப்பை அரசு மானியமாகக் கொடுத்து வருவதால், நடைமுறையில் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வந்தாலும், ஏற்கெனவே சங்கத்துக்கு ஏற்பட்ட தொடர்நஷ்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. தொடர் நஷ்டத்தை அரசு ஒரே தவணையில் மானியமாகக் கொடுத்து உதவ வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் இயங்கிவரும் 34 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் பிரதானப்பங்கு வகித்து வருகின்றன. சுமார் 3,500 நியாயவிலைக் கடைகளை, 7,000 ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் இயங்கும் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பான டி.யு.சி.எஸ். நிறுவனம் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.

தற்போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையேற்றத்தால் அவதிக்குள்ளான சென்னை மக்களைக் கருத்தில்கொண்டு, தானாக முன்வந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்வதாலும் போக்குவரத்துச் செலவு, ஊழியர்களின் உழைப்பு சக்தியைக் கணக்கில் கொண்டால், நிறுவனத்துக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் நஷ்டம் ஏற்படுவதோடு, விற்பனையில் ஈடுபடும் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர். கடந்த மே மாதம் வரலாறு காணாத அளவுகத்கு துவரம்பருப்பு நூறு ரூபாய் வரையில் விலை ஏறியபோதும் டி.யு.சி.எஸ். நிறுவனம் ரூ.87க்கு விற்பனை செய்து வந்தது. அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ.60 என விலை குறைத்து விற்பனை செய்ததால் கிலோ ஒன்றுக்கு சங்கத்துக்கு ரூ.27 இழப்பு ஏற்பட்டது.

இதுபோன்று தொடர்ந்து சென்னை மக்களுக்குச் சேவை செய்துவரும் டி.யு.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தைப் பெற்று தன்னுடைய சந்ததிகளுக்கு நல்ல வாழ்க்கை நிலையை அமைத்துக் கொடுக்க இயலாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணிமுடித்து கண்காணிப்பாளர் நிலையில் இருந்து ஓய்வுபெறும் ஊழியருக்குக் கிடைக்கும் பணிக்கொடை (கிராஜுட்டி) தொகை ரூ.2.30 லட்சம் மட்டுமே. ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியம் ரூ.13 ஆயிரம் மட்டுமே ஆகும். ஆனால், தலைமைப் பொறுப்பிலிருந்து நிர்வகிக்கும் அலுவலர்கள் 6 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியத்தைச் சங்க நிதியிலிருந்து பெற்று வருகின்றனர்.

அரசு ஊழியர்களில் 6வது ஊதியக்குழு பரிந்துரையை அமல் செய்யாதவர்களுக்கென அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை தனியாக வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைப் பணியாளர்களுக்கு மேற்படி அரசாணையை அமல் செய்யக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுமதி வழங்காத காரணத்தால் 1-7-2009, 1-1-2010, 1-7-2010 ஆகிய மாதங்களில் வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வின் மூலம் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வில் 16 சதவீதம் ஊதிய உயர்வைப்பெற முடியாமல் இழந்து நிற்கிறார்கள், பண்டக சாலை ஊழியர்கள்.

இந்த நிலையில் 34 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் 31-3-2010 உடன் முடிந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன.

புதிய ஊதிய ஒப்பந்தம் 1-4-2010 முதல் ஏற்படுத்த தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுக்கு மனது இறங்கவில்லை.

பொதுமக்களை விலையேற்றத்திலிருந்து பாதுகாத்திட தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு உண்பதற்காக உழைப்பதும் உழைப்பதற்காக உண்ணுவதும் என்கிற நிலையில் தன்னைப் பழக்கிக்கொண்டு உழைத்திடும்  அந்தக் கூட்டுறவு தொழிலாளிக்கும் விலையேற்றப் பாதிப்பு உண்டு என்பதைத் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அவர்களது ஊதிய உயர்வுக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை கருணையோடு பரிசீலனை செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகளை அரசே வழங்க தமிழக முதல்வர் தகுந்த அரசு ஆணை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com