ஆசிரியர் பணி எனும் அறப்பணி!

மண்ணுக்குள் இருக்கும் ஊற்றைத் தோண்டினால் நீர் பீறிட்டு வருகிறது. மணிக்குள் இருக்கும் ஒளியைப் பட்டை தீட்டினால் ஒளி வீறிட்டு வீசுகிறது. அப்படியே ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் அறிவைத் தீட்டினால் கல்வி
ஆசிரியர் பணி எனும் அறப்பணி!
Updated on
3 min read

மண்ணுக்குள் இருக்கும் ஊற்றைத் தோண்டினால் நீர் பீறிட்டு வருகிறது. மணிக்குள் இருக்கும் ஒளியைப் பட்டை தீட்டினால் ஒளி வீறிட்டு வீசுகிறது. அப்படியே ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் அறிவைத் தீட்டினால் கல்வி எனும் ஒளி மிளிரும். அதாவது கல்லுதல் வேண்டும். கல்வி தருதல் வேண்டும். குழந்தைகளுக்கு அந்தக் கல்வியை அளிப்பவர்கள் தெய்வத்துக்கும் முன்பாக வணங்கப்படும் ஆசிரியர்கள்தான்.

கரையும் பொருள் செல்வத்தைவிட கரையா கல்விச் செல்வத்தை அளிப்பவர்கள் ஆசிரியப் பெருமக்கள். கல்வித் தாயின் கலைக் கோயில்கள் பள்ளிகள். அந்தக் கோயிலில் இறைவனை அடையாளம் காட்டுபவர்கள் ஆசிரியர்கள். கண் போன்ற கல்வியைக் கற்க மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்ப்பவர்கள் தான் ஆசிரியர்கள். தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் முதலாளி ஆவதை ஒருவனும் விரும்பமாட்டான். ஆனால், தன்னிடம் கற்கும் மாணவன் சிறந்த அறிஞனாக ஆவதைக் காணும் ஆசிரியப் பெருமக்கள் பெருமகிழ்ச்சியுறுவர். ஒரு விளக்கு இருந்தால் போதும், அதைப் பயன்படுத்தி பல விளக்குகளை ஏற்றலாம். ஒரு நல்லாசிரியர் பல நல்ல மாணவர்களை உருவாக்கி நாட்டின் பெருமையை உயர்த்துகிறார். ஓர் ஆசிரியர் தன்னிடம் கல்வி பயின்ற மாணவரை மறந்து விடலாம். ஆனால், ஒரு மாணவர் தான் கல்வி பயின்ற ஆசிரியரை என்றும் மறக்க மாட்டார். அதுவே நல்ல மாணவருக்கு அடையாளம்.

மாணவரது மனத்திரையில் மண்டிக் கிடக்கும் மாசுகளை நீக்கக் கூடியவரே ஆசிரியர். மாணவரது மனத்திரையில் மண்டிக்கிடக்கும் மாசுகளைத் தீர்க்கக்கூடிய ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நன்னூலாசிரியர், நற்குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும், அருள் குணம் படைத்தவராகத் திகழ வேண்டும், தெய்வ வழிபாடு கொண்டவராக விளங்க வேண்டும். சிறந்த கோட்பாடு கொண்டவராகவும், மேன்மையான நெறிகளைப் பின்பற்றக் கூடியவராகவும் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளைப் பயின்றவராகவும், எப்போதும் பயின்று கொண்டிருப்பவராகவும், அங்ஙனம் தான் கற்ற கலைகளில் தெளிவு பெற்றவராகவும், கற்கும் மாணாக்கர்களுக்கு எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர் நிலத்தைப் போலவும், மலையைப் போலவும், மலரைப் போலவும், மாட்சிமை கொண்டவராகத் திகழ வேண்டும். உலகியல் அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மலர் போன்ற உயர்ந்த குணத்தையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஒரு நல்லாசிரியன் பெருமை, வலிமை, பொறுமை, பருவத்திற்கேற்றவாறு பலன் தரும் பண்பு ஆகியவை கொண்ட நன்னிலத்தைப் போலவும், அளந்து கூறமுடியாத அளவு பரப்பையும், எல்லையற்ற பெரும் பொருளையும், உயர்தோற்றத்தையும், மழை பெய்யாக் காலத்தும் வளம் நல்கும் மலையைப் போலவும், பொருளின் எடையைக் காட்டி ஒரு பக்கம் சாயாது நிற்கும் தராசு போலவும், மங்கலத் தன்மை பொருந்தி, இன்றியமையாததாக விளங்கி எல்லோரும் மகிழ்ந்து போற்றும் மலரைப் போலவும் விளங்க வேண்டும் என பவணந்தியார் எடுத்தியம்புகிறார். இவைதான் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய இலக்கணங்கள்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிவு போதித்து வெளிச்சம் காட்டும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் இன்றைய காலகட்டத்தில் அருகி வருகிறார்கள். தங்களின் சுயநலத்துக்காகத் தன்னிடம் கல்வி கற்கவரும் மாணவர்களை பலிகடா ஆக்குகிறார்கள். குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற மனதில் நல்ல எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டிய ஆசிரியர்கள் தீயநச்சுச் செடிகள் வளரக் காரணமாக அமைந்துவிடக் கூடாது.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்ற முக்கோண வடிவத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். "தன்னலமற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது ஆசிரியரின் நெஞ்சம்'. ஒரு தாய் தனக்குப் பிறந்த பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அதேபோல ஓர் ஆசிரியர் தம்மிடம் பாடம் பயிலவரும் எந்தப் பிள்ளையையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. "ஒரு நல்ல பள்ளி ஆசிரியர் ஆயிரம் பாதிரியார்களுக்கு ஈடாவார்' என்பது அறிஞர் ராபர்ட்டின் கருத்து. ஓர் ஆசிரியர் பாடப் புத்தகங்களுக்கும், அப்பாடப் புத்தகத்தில் உள்ள கருத்துகளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கரையேற்றி வைப்பதில் பாலமாக அமைகிறார்.

பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர்களுக்கு நல்ல தரமான கல்வியை அளித்து அவர்கள் வாழ்வில் வளம்காண வேண்டும் என்பதற்காக முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்து வேலையில்லாமல் வாடும் பல பட்டதாரிகளின் வயிற்றில் பாலை வார்த்தது போல உள்ளது அரசின் இந்த அறிவிப்பு. மாணவர்களின் மனச்சுமையைக் குறைக்கவும், சமச்சீர் கல்வியை உண்மையாக ஏற்றத் தாழ்வின்றி அமல்படுத்தும் வகையிலும், அவர்களின் நினைவாற்றலை வளர்க்க சதுரங்க விளையாட்டில் பயிற்சி, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணங்கள், வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் ஆகியவைகளை அரசே வழங்கி மாணவர்களிடையே கற்றலின் சூழலை மென்மையாக்கி உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர் - மாணவர் - ஆசிரியர்களிடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அரசின் நோக்கம் வெற்றியடைய வேண்டுமானால், ஆசிரியர்கள் தரமானவர்களாக, திறமையானவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே சமயத்தில் பெற்றோர்களும் தங்கள் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது. கடல்சூழ்ந்த இவ்வுலகில் அரசும் ஆசிரியர்களும் ஒரு மாணவரின் வளர்ச்சிக்குத் தோணியாக இருந்தால், அங்கு துடுப்பாக இருந்த அந்த மாணவரைக் கரைசேர்க்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. தன் மகனை அல்லது மகளை பள்ளியில் சேர்த்துவிட்டால் மட்டும், பெற்றோர்களின் கடமை முடிந்து விடுவதில்லை.

அவர்கள் தொடர்ந்து கற்கிறார்களா என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் தருவதே பெற்றோர்களின் கடமையாகும். கண்டிப்பும், கண்காணிப்பும் பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் தீபம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். அறிவை அபிவிருத்தி செய்யாத ஆசிரியர், தன் மக்களை நல்ல ஒழுக்கத்தில் வளர்க்காத பெற்றோர், தன் குடிகளைக் காக்கத்தவறிய அரசன் இவர்கள் எல்லாம் ஓட்டை விழுந்த கப்பலைப் போல விளங்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com