

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். வேண்டுமானால் நெரிசல் அதிகமான பேருந்து அல்லது ரயிலில் யாருடைய காலையாவது மிதியுங்கள். மிதிபட்டவர் முகத்தில் நவரசங்களும் தோன்றும். என்ன சில முகங்கள் கெஞ்சும். இன்னும் சில முகங்களோ கோபத்தில் உங்களை மட்டுமல்ல உங்களது தாய், தந்தை மற்றும் இன்னும் கூடுதலாக இந்த உலகையே திட்டித் தீர்க்கும்.
இந்த உலகில் வாழும் உயிரினங்களில் மனிதர்களும் ஒருவர் என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனாலும் சிறிய அளவிலான உயிரினங்கள் இல்லையென்றால் என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள். நினைக்கவே பயமாயிருக்கும். உதாரணமாக, சென்னை நகரில் மட்டும் பாக்டீரியாக்கள் வேலை நிறுத்தம் அறிவித்தால் சென்னை ஒரு நாளில் நாறிவிடும். முகமூடிகளுடனேயே அனைவரும் அலைய நேரிடும். வாய்வழியே பேசப்படும் மொழியே தரப்படுத்தப்பட்ட கருவியாக உள்ளது,. எனவே உரக்கப் பேசும் மனிதர்களிடம் பேச இயலாத மற்ற உயிரினங்கள் தமது செய்கைகளாலேயே மன்றாட வேண்டியுள்ளது.
சரி, விஷயத்திற்கு வருவோம். மனிதர்களைப் போலவே விலங்கினங்களும் தமது உடல் மொழியின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனவாம். சமீபத்தில் எலியின் உடலில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு கால்நடைக்கு சிகிச்சைப் பார்க்கும் மருத்துவரைப் பற்றி யோசியுங்கள். அந்த கால்நடையின் உடல் அசைவு, வெளிப்படுத்தும் ஒலி போன்றவைகளே அவருக்கு மருத்துவம் செய்ய உதவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால், கால்நடைகள் எனக்கு அமாக்சிசிலின் அலர்ஜிக் என்றா கூறப்போகின்றன?
இதனிடையே பேசியே கொல்லும் நம்மவர்களும் இருக்கின்றார்கள். மருத்துவரின் அறைக்குள் நுழையும்போதே, இரண்டு நாளா காலைக்கடனே சரியா வெளியேறலை என புலம்பிக்கொண்டே சொல்லிவிட்டு, உங்களுக்கு கடன் வைக்கவில்லை என்று சொன்ன உடனே உற்சாகமாக சிகிச்சை பார்க்கின்றனர் நம்மூர் மருத்துவர்கள்.
அதே நேரம் மனிதர்களையும் கால்நடையாகவே பாவித்து நோயாளி சொல்வதைக் கேட்டும், கேட்காமலும் காலாவதியாகும் மாத்திரை எழுதிக்கொடுக்கும் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். ஏதோ கோவிலுக்குச் சென்று தெய்வத்திடம் முறையிடுவது போலவே மருத்துவரிடமும் கொஞ்சமும் அதிர்வில்லாமல் பேசுவர்.
சரி, ஆய்விற்கு வருவோம். கனடா நாட்டிலுள்ள மைக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேப்ரி மைகேல் மற்றும் அவரது நண்பர்கள் மேற்கொண்ட ஆய்வு, அகத்தின் அழகு முகத்தில் தெரிவதை மெய்ப்பித்துள்ளது. இந்த ஆய்வில் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உடல்வலி தொடர்பான அறிஞர் கேனாத் க்ரேக் உதவியுள்ளார். கேனாத் துறையின் சிறப்பு என்னவென்று சொன்னால், அவரது துறையில் முகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக ஆராயும் வல்லுநர்களும் உள்ளனர். இது போதாதா? அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
ஒரு சில எலிகளின் உடலில் அசிடிக் அமிலத்தைச் செலுத்தினார்கள். பின்னர் இதன் விளைவாக எலியார் நடந்துகொண்ட விதங்களைச் சுமார் 30 நிமிடங்கள் படப்பதிவு செய்துள்ளனர். இந்த படப்பதிவினைத் துல்லியமாக ஆய்ந்து சில முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
கண்களை மூடிக்கொள்வது, கண்களுக்கு அருகிலுள்ள பாகங்கள் துடிப்பது, மூக்கும் தாடைகளும் அகலமாவது. இதே உணர்ச்சிகள் மனிதர்களுக்கு ஏற்படுவது இயல்பானது. இதோடு மட்டுமல்லாது எலிகளுக்கே சிறப்பாக உள்ள சில விஷயங்களையும் பட்டியலிடுகின்றனர். அதாவது, எலிகளின் காது பின்னோக்கித் திரும்புவது, அதன் மீசைகள் பலவாறு துடிப்பது போன்றவைகளும் அடக்கம்.
இதனால் நமக்கென்ன என்கிறீர்களா? மனிதர்களுக்குத் தேவையான வலி நிவாரணிகளின் வீரியத்தைப் பரிசோதிக்க இந்த முயற்சி உதவும் என்கிறார்கள். எது எப்படியோ, அகத்தின் அழகு நமக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் தெரியும் என்பது இதன் மூலம் முதற்கட்டமாக நிரூபணமாகியுள்ளது.
வேண்டுமானால் ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்துவிட்டு அதன் முகத்தைப் பாருங்கள். "நைனா என்ன விட்ருபா' என்று சென்னை செந்தமிழில் செப்புவது போல் இருக்கலாம்.
என்.மாதவன், மதூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.