நல்ல மனம் வேண்டும்!

ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம்.
நல்ல மனம் வேண்டும்!
Published on
Updated on
2 min read

ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனத்தின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தத்தம் கடமைகளைச் செய்கின்றன.

அதாவது மூளை கருவி என்றால் மனம் அதன் இயக்கம் ஆகும். பொறிகளுக்கு தனியே அறிவுமில்லை, ஆற்றலும் இல்லை, பொருளுமில்லை. பொறிகளைப் பொருள்வழி இயக்க வல்லது மனமே. நல்ல நடத்தை என்பது மனதுக்கு அலங்காரம் மட்டுமல்ல, நல்ல மனிதனுக்கு அடையாளம். அன்பையும், பொறுமையையும் போற்றி வந்த மனம் இன்று வெறுப்பையும் கொடுமையையும் கொட்டும் இடமாகி விட்டது. பொறாமையாலும், பொச்சரிப்பாலும் மனித மனதில் சூழும் இருள் மற்றவர்களையும் துன்பத்திற்குள்ளாக்கும்.

மனிதனை மனிதானாக்க, மனிதரிடமிருக்கும் மிருகத்தனத்தைப் போக்க, மனிதனை தேவனாக்க, எண்ணத்திலுள்ள இருளைப் போக்க ஒருவனுக்கு மனமே அடியிட்டுக் கொடுக்கிறது. மனிதன் செய்யும் எல்லா காரியங்களுக்கும் அவனது மனமே வித்து அவன் படும் இன்பமும், துன்பமும் அதன் விளைவுகள். நல்ல எண்ணம், நன்மைப் பயக்கும், உள்ளத்தை உயர்த்தும், அமைதி நல்கும். உடம்பை வளர்க்க உணவு, உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை, உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள் தேவை. எளிமை வேண்டும் சொல்லில் சத்தியம் வேண்டும். செய்கையில் தூய்மை வேண்டும். நீரோட்டம் போல மனித மனம், தேரோட்டம் போல வாழ்க்கை என்பது. மேடு பள்ளம் என்பது வாழ்க்கையின் நியதி.

நச்சுப் பொய்கையிலே யட்சனுடைய வினாக்களுக்கு விடையளித்து கொண்டு வந்த தருமபுத்திரன் சுகம் என்பது என்ன என்ற கேள்விக்கு நல்ல நடத்தையே சுகம் என்றார். நல்ல நடத்தையை நல்குவது நல்ல மனம். கல்மனம் கரைந்து நன்மனம் பெற்றோர் மனதை இறைவன் கோயிலாகக் கொண்டு வீற்றிருப்பான். சுயநலமிகுந்து தீய குணங்களின் உறைவிடமாக மனது இருக்கக் கூடாது. மனதில் தீய எண்ணங்கள் குடி கொண்டால், அது காடாகி விடும், அங்கு விலங்குகள் நடமாடும்.

சிந்தை நலமாக இருந்தால் சொல் நலமாக இருக்கும் சொல் நலமாக இருந்தால் செயல் நலமாக இருக்கும். செயல் நலமாக இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். நாம் நம்மை அறிந்து வாழ்க்கையில் போராட மனம் உதவுகிறது. மனித இனம் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது பகுத்தறிவைக் கொண்டு மிக நுணுக்கமாக ஆராயும் திறனும் கொண்ட.து. பொறுமையும், நிதானமும் கைவரப் பெற்றால் மனிதன் புனிதனாக உயருகிறான். அருளே உருவம் கொண்டவர்களால் சங்கிலி போன்ற வாழ்க்கை முறையின் கண்ணியாக அவர்களின் நன்னடத்தை அமைகிறது.

மனித மனம் விசித்திரமானது அதுவே நரகத்தையும் ஏற்படுத்தும், சொர்க்கத்தையும் படைக்கும் ஆற்றல் வாய்ந்தது. மனதுக்கு அணிகலனாக இருப்பது தூயசிந்தனை. அந்த உள்ளத்தில் நல்ல எண்ணம் எனும் பயிர் விளைந்தால் அது மலர் மணம் பரப்பு பொழிலாகி விடுகிறது. அன்பு நலன், அடுத்தவர் நலம் பெற வேண்டும் என்ற கருணை மனம் வேண்டும்.

மனம் தெளிவாக இருந்தால் தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றி வேரூன்ற வழி வகுக்கும். தம் சிந்தனையை பயன்படுத்தி அடுத்தவருக்கு தீமை தராமல் பிறருக்கு பயன்பட வாழ்வதே மனிதனின் கடமை.

அரசர், ஆண்டி, உயர் பதவியில் இருப்பவர், உதிரம் சிந்தி உழைப்பவர் வரை மனதை அது போன போக்கில் போக விடாமல், தீய காரியகளுக்கு போவதைத் தடுத்து நல்ல காரியங்களுக்கு ஈடுபட செய்வது அறிவு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி. நாம் செய்யும் தவறுகளை அறியும் ஒரே சாட்சி நம் மனசாட்சி. அதனிடமிருந்து நாம் தப்ப முடியாது. இன்று மனித மனங்கள் காற்றில் பறக்கும் கற்பனை குதிரைகளாகி விட்டன.

ஆடம்பரமாக வாழ்வது தான் வாழ்க்கை என்ற வகையில் மக்கள் மனங்கள் மாறி வருவதால் கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து வருகின்றன. இந்த உலகில், சத்தியம், நீதி, நேர்மை, நியாயம், உண்மை இவைகளுக்கு எல்லாம் தனி இடம் உண்டு. நாம் நம் சுய தேவைகளுக்காக விதிமுறைகளை மீறி மனம் மாறும் போது தான் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மனிதன் உருவத்தில் மனிதனாக இருந்தால் போதாது அவன் உள்ளத்தில் நேர்மை மணம் கமழுமானால் அவன் முழுமைப் பெற்ற மனிதன் ஆகிறான். மனம் உள்ளவன் மனிதன். மனம் ஒரு பூக்கூடை, அதில் நச்சரவம் மறைந்திருக்கலாகாது. மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு பயனளிக்கிறது அதுபோல மனிதன் மனதாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மை அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com