
உலக காற்றாலை அமைப்பு (Global Wind Energy Council) 2020-ஆம் ஆண்டு உலக மின்சார தேவையில், 12 சதவீதம் காற்றாலையினால் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளது. மேலும் 2030-ஆம் ஆண்டு உலக தேவையில் 22 சதவீதம் காற்றாலை கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
உலக அளவில், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், சீனாவுக்குப் பிறகு காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், கடற்பரப்பில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்படும் திட்டம் இந்தியாவில் இதுவரை அமலாக்கப்படவில்லை. இந்தியாவில் எல்லா காற்றாலைகளும், நில பரப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல வளர்ந்த நாடுகளில் கடற்சார்ந்த காற்றாலை மின் சக்தி திட்டங்கள் பெருமளவில் அமல்படுத்தப்பட்டு, மின் சக்தி கிடைக்கப் பெற்று வருகிறது.
இந்தியா சந்தித்து வரும், கடுமையான மின் பற்றாக்குறை பிரச்னையைச் சமாளிக்க, பல வழிமுறைகளை கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், கடற்சார்ந்த காற்றாலை மின் திட்டங்களை பெருமளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவை சுற்றி சுமார் 7,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் கடற்பரப்பை அடுத்து கடற்சார்ந்த காற்றாலை மின் திட்டங்களை அமைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தை மேலும் அமலாக்காமல் உள்ளதற்கு எந்தவித நியாயமும் இல்லை.
நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் இந்தியா நிலப்பரப்பில் 50,000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கணக்ககிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 18,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவே காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளிலிருந்து ஆண்டொன்றிற்கு சுமார் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. ஆண்டில் பல மாதங்கள் காற்றின் வேகம் பெரிதளவும் குறைகிறது, என்பதே காரணம் இந்த நிலையில் நிலப்பரப்பில் உள்ள காற்றாலைகளிலிருந்து, மின்சார உற்பத்தியை கணிசமாக கூட்டுவது இயலாத காரியம். மேலும் நிலத்தை தேர்ந்தெடுத்து அந்த நிலத்தை
கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னைகளினால், புதிய நிலம் சார்ந்த காற்றாலைகள் அமைப்பதிலும் பெரிதளவில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கடற்பரப்பில் காற்றாலை மின்சக்தி திட்டங்கள் அமல்படுத்தினால், இது நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
கடற்சார்ந்த காற்றாலை மின்சார அமைப்பினால் ஏற்படும் நன்மைகள்: நிலப்பரப்பை காட்டிலும், கடற்பரப்பில் காற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளது. கடற்பரப்பில், ஒரு வினாடிக்கு 8 சென்டி மீட்டர் வரை காற்றின் வேகம் வீசக்கூடும். இத்தகைய கூடுதலான காற்றின் வேகத்தினாலும், இந்த வேகமான காற்று வருடம் முழுவதும் உள்ளதாலும், கடற்சார்ந்த காற்றாலைகளில் மின் உற்பத்தி, திறன் முழு அளவில் அடையப்படும். நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சக்தி உற்பத்தி திறனில் 40 சதவீதமே உள்ள நிலையில், கடற்சார்ந்த காற்றாலையில் மின்சாரம் 100 சதவீதத்தினை தொடக்கூடும்.மேலும், கடற்சார்ந்த காற்றாலைகள், நிலத்திலிருந்து தூரத்தில் அமைக்கப்படுவதால், அவையிலிருந்து எழும் சப்தம், நிலப்பரப்பில் உள்ள காற்றாலைகள் போல், பிரச்னைகள் ஏற்படுத்தாது.
வளர்ந்த நாடுகளில் கடற்சார்ந்த காற்றாலைகளின் வளர்ச்சி: உலகத்தில் கடற்சார்ந்த காற்றாலைகள் அமைப்புகளில் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றன.
பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில், தற்போது 58 கடற்சார்ந்த காற்றாலை மின்சக்தி அமைப்புகளில், ஆண்டொன்றிற்கு சுமார் 6040 மெகாவிற்கு மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. 2012-ஆம் ஆண்டு 4,336 மெகாவாட் அளவில் உற்பத்தியான மின்சாரம், 2013-ஆம் ஆண்டு கணிசமான அளவில் கூடியுள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மேலும் பிற அமைப்புகளில், 1,045 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி திறன் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 2020-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் 40,000 மெகாவாட் கடற்சார்ந்த காற்றாலை மின்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்து நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 2030-ஆம் ஆண்டு, 1,50,000 மெகாவாட் கடற்சார்ந்த காற்றாலைகளில் மின்சாரம் தயாரிக்கவும் ஐரோப்பாவில் திட்டம் வகுக்கப்படுகிறது.
மேலும் கனடா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கடல் சார்ந்த காற்றாலைகல் அமைக்கப்பட்டு, மேலும் பல மடங்கு விரிவுபடுத்த திட்டம் உள்ளது. சீனாவில் திட்டங்கள் தொடங்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.
கடற்சார்ந்த காற்றாலை மின்சார திட்டத்தில் முதலீடு:கடற்சார்ந்த காற்றாலை மின்சார திட்டம் அமைக்க, அதே திறன் உள்ள நிலம் சார்ந்த காற்றாலை திட்டத்தினை காட்டிலும் 1.5 முதல் 2 மடங்கு அதிகமாக முதலீடு தேவைப்படும் ஒரு மெகாவாட் திட்டம் அமைக்க நிலம் சார்ந்த காற்றாலையின் முதலீடு ரூபாய் 7 கோடி என்ற நிலையில், அதே அளவு கடற்சார்ந்த திட்டம் அமைக்க ரூபாய் 11 கோடியிலிருந்து 14 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
கடற்சார்ந்த காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி செலவு: அதிக காற்று வேகம் உள்ளது என்பதாலும், வருடம் முழுவதும் 100 சதவீதம் திறனுடன் செயற்படக்கூடியதாக உள்ளதாலும், கடற்சார்ந்த காற்றாலை மின் சக்தியின் உற்பத்தி செலவு, நிலம் சார்ந்த காற்றாலை மின் சக்தியைவிட குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், அனல் மின் நிலையங்களிலிருந்து தயார் செய்யப்படும் மின்சாரத்தைவிட கடற்சார்ந்த காற்றாலை மின்சாரம் உற்பத்தி செலவு குறைவாகவே காணப்படும்.
இதுவரை இந்தியாவில் செய்யப்பட்டுள்ள ஆயத்தப்பணிகள்: காற்றாலை ஆராய்ச்சி மையம் என்ற மத்திய அரசு சார்ந்த நிறுவனம் தமிழ்நாட்டில் கடலோரப் பகுதியான வெள்ளமடம் (தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் இட்டரை (ஈரோடு மாவட்டம்) போன்ற இடங்களில் 80 மீட்டர் உயரமுள்ள காற்றின் வேகத்தை கண்காணிக்கப்படும் இரண்டு அமைப்பை ஏற்படுத்தி, ஆராய்ச்சி செய்து வருகிறது, சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும், ஒரு ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடற்சார்ந்த காற்றாலை அமைப்பதின் முக்கியம்: உலக காற்றாலை அமைப்பின் தலைவர், வளர்ந்த நாடுகளில் கடற்சார்ந்த காற்றாலை மின்சக்தி அமைப்புகள் பெரிதளவில் அமைத்து வருவதுபோல், இந்தியாவிலும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடற்பரப்பில் எப்போதும் அதிக வேகத்துடன் காற்று வீசுவதால், வருடம் முழுவதும் கடற்சார்ந்த காற்றாலை மின் நிலையங்களில் மின்உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் மின் பற்றாக்குறை பிரச்னையைச் சமாளிக்க ஓரளவு உதவும்.
மத்திய அரசு கடற்சார்ந்த காற்றாலை மின்சாரத் திட்டத்திற்கு ஊக்கமளிக்க சில மானியங்களை வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், நடைமுறையில் இதுவரை செயல்படுத்தப்படுவதில்லை.
கடலில் வீசும் காற்றின் அசுர வேகத்தைப்போல் மத்திய அரசு செயல்பட்டால், பெரிதளவு கடற்சார்ந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்பட்டு, தொழில், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்க முடியும்.
இதுபோன்ற சிறந்த திட்டங்களை அமல்படுத்த, மத்திய - மாநில அரசுகள் துரிதமாகச் செயல்பட முனையவில்லை என்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.