

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு'. "ஆயிரம் அறச்சாலை நிறுவுவதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே சிறந்த அறம்' - இதுபோன்ற மூதுரைகள் கல்வியின் சிறப்பை பறைசாற்றுகின்றன.
கற்றோர்கள் வேலைவாய்ப்பு பெற்றாலும் பெறாவிட்டாலும், கல்விக்கு அவர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், நூறு ரூபாயாக, ஆயிரம் ரூபாயாக, லட்சம் ரூபாயாக ஏதோ ஒருவிதத்தில் வாழ்வில் அவர்கள் அடைந்தே தீருவர் என்பதில் ஐயமில்லை. எனவேதான், கல்வியை கல்விச் செல்வம் என்றனர்.
சுதந்திர இந்தியாவில் கடந்த 67 ஆண்டுகளாக மெக்காலே எனும் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையே அமலில் உள்ளது. தற்போதுள்ள கல்வி முறை வாழ்க்கை நடத்த வேண்டுமானால் பயன்படலாம். வாழ்க்கைக்கு பயன்படும் கல்வி என்று சொல்லிவிட முடியாது. சுதந்திரம் கிடைத்தாலும் நான் கொடுத்துள்ள இந்தக் கல்வி முறையால் இந்தியர்கள் கருப்புத்தோல் போர்த்திய வெள்ளையராகத்தான் நடமாடுவார்கள் என மெக்காலே, அவருடைய நாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளதையும் வரலாற்றில் அறிய முடிகிறது. அன்னிய சிந்தனை, நடை, உடை, பாவனை, உணவு முறை, வாழ்க்கை முறையில் சில நேரங்களில் இப்போதும் வெளிப்படுகிறது. இந்த நாள்வரை அன்னிய மோகம் நம்மை ஆட்டிப்படைப்பதை மறுக்க முடியவில்லை.
ஆரம்பப் பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமைகளில், முதல் வகுப்பில் நீதி போதனை வகுப்பு நடைபெற்றது. அது நீக்கப்பட்டுவிட்டது. தற்போது மாணவனை மாணவனே கொலை செய்வது, ஆசிரியை படுகொலை, பள்ளி முதல்வர் மாணவரால் அடித்துக் கொலை இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் பாலியல் வன்முறைக்கும் பஞ்சமில்லை. கற்காலத்தில் வசிக்கிறோமோ எனச் சந்தேகம் வருகிறது.
நாடு சுதந்திரம் பெற்றதும் கல்வித் துறையில் மாபெரும் மாறுதல் கொண்டு வந்திருக்க வேண்டும். பாதி பாடத்திட்டங்களில் அடிப்படைத் தொழில்பயிற்சிகள், வேலைவாய்ப்புக்கான பயிற்சி, மீதி பாடத்திட்டங்களில் தனிமனித ஒழுக்கத்திற்கு உயிரூட்டக்கூடிய கல்வியே இப்போது அவசியமாகிறது. குணநலன், பண்புகளை அது உருவாக்க வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிகளில் மனு எழுதும் முறை, அக்ரிமென்ட் பாண்டு எழுதும் முறை தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் சமையல், அடிப்படை தொழிற்பயிற்சி, உடற்பயிற்சி போதிக்கலாம். இதுபோன்ற பயிற்சிகள் முறையாக கிடைக்காத காரணத்தால், விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யக்கூட அனுபவம் வாய்ந்தவர்களைத் தேடும் நிலையும், படிக்காதவர்களுடன் படித்தவர்களும் கண்ட கண்ட நோய்களுடன் டாக்டர்களிடம் தவம் இருக்கும் நிலையும் உள்ளது. யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
படிக்காதவர்களுக்கிணையாக படித்தவர்களும் டாஸ்மாக் கடைக்கு செல்வதையும், மது அவர்களுக்கு அடிமையாகி உள்ளதையும் அறிய முடிகிறது.
மாணவ - மாணவிகளுக்கு வாழ்வியல் சார்ந்த அடிப்படைக் கல்வி முறையை அமல்படுத்தினால் மட்டுமே அடிப்படை கோளாறுகளைச் சரிசெய்ய இயலும்.
குடும்ப நல நீதிமன்றங்களில் நூற்றுகணக்கில் விவாகரத்து வழக்குகள் வந்தநிலை மாறி, ஆயிரக்கணக்கில் வழக்குகள் வருவதாக அறிகிறோம். அதில் அதிக பங்கு மேற்படிப்பு படித்துள்ள கணவன் - மனைவிகளுக்கு இடையேதான். சகிப்புத் தன்மையையும் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் கற்ற கல்வி தராமல் போனது துரதிருஷ்டம்தான். பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கனுப்பும் அவலங்களும் அரங்கேறுகின்றன.
உயர் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக ஊழல் குற்றசாட்டுகளுக்களாகும்போது மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மெத்தபடித்தும் மனசாட்சியில்லா மனிதர்களாக அவர்களை பார்க்கின்றனர்.
இளநிலை, முதுநிலை படிக்கும்போது, வாழ்வை செம்மைப்படுத்த மனோதத்துவம் உள்ளிட்ட மனவியல் பாடங்களும் சேர்க்கப்பட வேண்டும். தேசத்திற்கு வாழ்வையே தியாகம் செய்துள்ள பல்துறை நிபுணர்களைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் அறிவிக்கச் செய்வதன் மூலம் தேசபக்தியையும், சமுதாய உணர்ச்சியையும் கல்லூரி மாணவர்கள் பெறுவார்கள். பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அறியும்போது பெருமிதம் அடைவார்கள்.
எதற்கெதற்கோ அன்னியரைக் காப்பியடிக்கும் நாம் ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் மாணவப் பருவத்திலேயே தேசபக்தியை வளர்க்கும் ராணுவ பயிற்சியையும் ஒரு பாடமாக வைத்துள்ளதை ஏன் காப்பியடிக்கக் கூடாது?
15 வருடங்களுக்கு முன்புகூட எந்த வேலையுமே இல்லாமல் இளைஞர்களும், இளம் பெண்களும் தவித்து வந்தனர். தற்போது நிலைமை மாறியுள்ளது. படித்தவர்களுக்கும், படிப்பைப் பாதியிலே விட்டவர்களுக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்த சம்பளத்திலாவது வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
மக்களின் பொருளாதாரம் சற்று உயர்ந்து, வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அடிதடி, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்களும் பெருகி உள்ளன. நல்ல குணநலன்களால் மட்டுமே இவற்றைக் குறைக்க முடியும். அந்த மனோபாவத்தை நற்கல்வி மட்டுமே தரும்.
விஞ்ஞான தொழில்நுட்பம்தான் மனித குலத்தையே அழிக்கக்கூடிய அணு ஆயுதங்களையும் கொடுத்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி நல்ல வழிகாட்டல் இல்லாத, மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் வெறியாட்டம் ஆடும் நிலையும் உள்ளது.
நல்லவர்களையும், வல்லவர்களையும் உருவாக்கிய குருகுல கல்வி முறையை நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துச் சென்றனர். இக்கால கல்வி வல்லவர்களை உருவாக்கியிருக்கலாம். நல்லவர்களை உருவாக்கியுள்ளது என உறுதியுடன் கூற இயலாது.
உயர்ந்த சிந்தனையோடு தீமைகளைத் தவிர்த்து நன்மைகளையே உலகிற்கு தரக்கூடிய கல்வி
முறையே உடனடித் தேவையாகிறது. நல்லவர்களையும், வல்லவர்களையும், விலைக்கு வாங்கப்பட முடியாத தரமான மனிதர்களையும் உருவாக்கும் நவீன கல்வி முறையே நமக்கு உடனடித் தேவையாக இருக்கிறது. அதுவே, நம் நல்வாழ்வுக்கு பயன்படும் கல்வியாக இருக்கும். மத்திய - மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.