

நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பருவமழை குறைவு; மழை நீரை நிலத்துக்கு அடியில் கொண்டு சேர்க்கும் மரங்கள் அழிப்பு, காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து வளரும் தன்மை கொண்ட தைல மரங்கள், சீமைக் கருவேல மரங்கள் பெருக்கம்; நிலத்தடி நீரை பெருமளவு வெளியேறும்படி அமைந்த ஆழ்குழாய்க் கிணறுகளின் பெருக்கம்; பசுமைத் தாவரங்களின் பரப்புக் குறைவினால் வளிமண்டலத்தில் கார்பன் அளவு மிகுந்து புறவெளி வெப்பமயமாதல்; கிராமங்கள் நகரங்கள் தோறும் ஆழம் இல்லாத குளங்கள் ஏரிகள்; ஆறுகளில் தேவையான தடுப்பணைகள் இல்லாதது போன்றவை நாட்டின் நீர் வளம் குறையக் காரணங்கள்.
நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும். இது கிணற்றுப் பாசனம் வளம்பெற வழிவகுக்கும். ஆண்டில் எப்பொழுதாவது கிடைக்கும் மழை உபரி நீர், ஆற்று உபரி நீர் ஆகியவற்றை குறைந்தது ஒரு போக விளைச்சலுக்காவது சேமிக்க வேண்டும். பாசன முறையை காலத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.
குளம், ஏரிப்பாசனம், கிணற்றுப் பாசனம், ஆற்று நீர் கால்வாய் பாசனம் என பல்வேறு பாசன முறைகள் உள்ளன. ஆற்று நீர் கால்வாய்ப் பாசனப் பகுதி ஆற்று நீரையும் மழை நீரையும் மட்டுமே நம்பி உள்ளது. கிணற்றுப் பாசனப் பகுதியும் ஏரி, குளப் பாசனப் பகுதியும் மழை நீரை மட்டுமே நம்பி உள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒன்று அல்லது இரண்டு ஏரி, குளங்கள் உள்ளன. மழை பெய்து குளங்கள் நிரம்பும் பொழுது மிகுந்த நீர், தொடர்புடைய குளங்கள் ஏரிகளுக்கு செல்லும் படியாக நீர் வரத்து வாரிகள் உள்ளன. புதிதாக அமைக்க வேண்டியதில்லை. தொடர்புடைய குளங்களில் முதன்மைக் குளம் நிரம்பினால் அது தொடர்புடைய நூற்றுக்கணக்கான குளங்கள் நிரம்பும்படி அமைந்துள்ளன.
இப்படி தொடர்புடைய முதன்மைக் குளங்களைக் கண்டறிந்து ஆற்று நீரைத் தடுப்பணைகள் மூலம் கால்வாய் வழி அல்லது குழாய் வழி வசதிப்படி இணைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் ஏரிகளும் நிரம்பும்.
கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் பயிர் விளைச்சல் காலம் வரை மூன்று நான்கு மாதங்கள் ஆற்று நீர் தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. ஆற்று நீர் குறைவுபட்டால் விளைச்சல் தடைபடும்.
இப்பொழுது உள்ள நிலையில், குளங்கள் நீர் கொள்ளளவு என்பது ஒரு முறை நிரம்பினால் தொடர் மழை இல்லை எனில் ஒரு போக விளைச்சல் கேள்விக்குறியாகிவிடும். எனவே, குளங்கள் ஏரிகளின் ஆழத்தை மிகுதிப்படுத்த வேண்டும்.
ஒரு குளத்தின் முதன்மைக் கரையின் மையத்திலிருந்து அதன் ஆழம் 30 அடி எனக் கொண்டால் குளத்தின் நீர் பிடிப்புப் பகுதியை எல்லையாகக் கொண்டு கணக்கிட்டு மற்ற மூன்று பகுதிகளும் இதே ஆழம் இருக்குமாறு தோண்டி கரை அமைக்க வேண்டும். கரை அகலம் 15 அடிக்குக் குறையாத அளவு இருக்க வேண்டும். இப்பொழுது குளத்து நீர் கொள்ளளவு இரு மடங்காகிவிடும். மேலும் 5 அல்லது 10 அடி வசதிப்படி ஆழப்படுத்தினால், இது குளத்தடி நீராக அமையும். இக்குளத்தடி நீர் தானாக மதகு வழி பாசனத்திற்கு செல்லாது. பாசனத்திற்கு வேறு வழிகளிலும் பயன் படுத்தக்கூடாது. இது குளத்து இருப்பு நீராக இருந்து நிலத்தடி நீரைச் சேமித்து வளப்படுத்தும்.
குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் அமைக்க வேண்டும். குளத்தின் கரைகளை வளப்படுத்த வேண்டும். படித்துறைகள் அமைக்க வேண்டும். நீர் வரத்து வழி, உபரி நீர் வெளியேறும் வழி வலுவுள்ளதாக அமைக்க வேண்டும். மண் தோண்டும் இயந்திரங்கள் உள்ள இக்காலத்தில் இப்பணி அனைத்தும் மிக எளிதாகும்.
கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் இம்மாதிரி குளங்கள் அமைக்கப்பட்டால் ஆற்றில் நீர் தொடர்ந்து விளைச்சல் காலம் வரை செல்ல வேண்டியதில்லை. குளங்களின் நீர்த் தேவைக்கு மட்டும் அணை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆற்று நீரை குளங்கள் ஏரிகள் நிரப்பும் படியாக மட்டுமே அமைக்க வேண்டும். எவ்வெப்பகுதி குளங்கள் ஏரிகளில் நீர் தேவைப்படுமோ அப்பொழுது மட்டும் தொடர்புடைய தடுப்பணை திறந்து நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இதனால் அணை நீர் சேமிக்கப்படும்.
இவ்வழிகளில் குளங்கள் நிரம்பும் போது ஒரு போகம் அல்லது இரு போக விளைசல் உறுதியாகும். குளத்தடிநீர் எப்போதும் இருப்பதால் நிலத்தடி நீர் வற்றாத கங்கையாக அமைந்து அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஆண்டு முழுக்க அமைந்து புன் செய்ப் பகுதிகள் செழுமை பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.