

இந்தியா அதிக அளவு மனித வளத்தைக் கொண்ட இரண்டாவது மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவின் சொத்தே அதன் மனித வளம்தான். இந்தியாவின் எதிர்காலம் இக்கால இளைய பாரதத்தினரையே நம்பியுள்ளது. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் அறிவையும், திறனையும், சக்தியையும் வெளிநாட்டினர் பெருமளவில் பயன்படுத்தி அந்நாட்டை வளம் கொழிக்க வைத்து உலக அரங்கில் பீடுநடை போட வைக்கிறார்கள். இவர்கள் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று வேலை செய்வதோ வெளிநாட்டில். இந்தியத் தாயின் பிள்ளைகள் தன் தாய் நாட்டின் பெருமையை மேலும் வளப்படுத்த இக்கால இளையதலைமுறையினர் முயல வேண்டும். தாம் பெற்ற கல்வி அறிவையும், திறனையும் இந்தியாவில் பயன்படுத்தி நம் நாடு உயர பாடுபட இக்கால இளைஞர்கள் முன் வரவேண்டும்.
ஒரு தாய் தனது எதிர்கால சக்தியாக, நம்பிக்கை நட்சத்திரமாக தங்கள் பிள்ளைகளையே கருதுவார். அதுபோல இந்தியாவும் தனது எதிர்காலத்தை இக்கால இளைஞர்களையே நம்பியுள்ளது. இளைஞர்கள்தான் வருங்காலத்தில் இந்நாட்டு மன்னர்கள், இந்தியாவை செம்மைப்படுத்தப் போகும் சிற்பிகள். இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதினருக்கு கீழானவர்களாகவும், 65 சதவீதத்தினருக்கும் மேல் 35 வயதிற்கு கீழானவர்களாகவும் உள்ளார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் 400 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி, உழைத்து நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறுவார்கள் என சமீபத்திய மக்கள் தொகை விவரம் குறித்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையின் பெரும் பங்கு வகிக்கும் இளைஞர்களின் பலம் 2030இல் உச்சத்தை அடைந்து அவர்களின் சக்தி உலகிற்கு தெரியவரும் என அப்புள்ளி விவரம் மேலும் தெரிவிக்கிறது.
எனவே, நம் இளைஞர்கள் அறிவாற்றலையும், திறமைகளையும் மேலும் சிதற விடாமல் அவர்களை அரசியலிலும் பயன்படுத்தி இந்தியாவின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தி கொள்ள வேண்டிய பொன்னான வாய்ப்பு இப்போதுள்ள அரசியல் தலைவர்களுக்குக் கிடைத்துள்ளது. பொறுப்புள்ள திறமையான இளைஞர்கள் தடம் கால வெள்ளத்தில் அடித்து செல்லாமல் எதிர்காலம் அவர்களின் பெயரை சொல்ல வேண்டுமானால் முதிர்ந்த அரசியல்வாதிகள் அரசு இயந்திரத்தின் லகானின் பிடியை இளைஞர்களின் கையில் கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். இக்கால இளைஞர்கள் எக்காலமும் இளைஞர்களாகவே இருக்கப் போவதில்லை, கால ஓட்டத்தில் அவர்களும் முதியவர்களாகி தங்கள் சக்தியையம், திறனையும் இழக்கக் கூடிய காலம் வெகுத் தொலைவில் இல்லாததால் நம் நாட்டின் விரைவான சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இந்தியா உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி வரைப்படத்தில் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படும் ஊழல்கள் அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்படும் போது, அங்கு இரண்டாம் தலைமுறையினரின் பங்களிப்பு ஏதுமில்லாத நிலையில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி என்பது அடுத்த பத்தாண்டுகளில் கவலையளிப்பதாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
பொருளாதார சிக்கலைக் காட்டிலும், விரைந்து வளரும் உலகில் பெரும் சவால்களையும், வளர்ந்த நாட்டின் இளைஞர்கள் பெறும் ஊதியத்தையும், தொழில்நுட்ப தகுதிகளையும், திருப்தியளிக்கும், மரியாதைக்குரிய தரமான வாழ்க்கையைப் பெற போராடி வெல்ல வேண்டிய சூழ்நிலையில் நம்நாட்டின் இளைய தலைமுறையினர் உள்ளார்கள். போதிய கல்வி வசதி, நல்ல மருத்துவ வசதி இன்மை ஆகியவை இக்கால இளைஞர்களின் வளர்ச்சிக்குத் தடைகற்கலாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல. வளர்ந்து வரும் முரண்பாடுகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவை இக்கால இளைஞர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அவர்களிடையே வேற்றுமையை உருவாக்கி, தவறான எண்ணங்களில் திசை திருப்புகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டநிலையில் தொழில்நுட்ப திறனுடைய இளைஞர்களின் பங்களிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
இந்திய தொழில்நுட்பத் திறமைப் படைத்த இளைஞர்களை உலக அரங்கின் கதவைத் தட்டி தொழில்நுட்பப் புரட்சியில் இரண்டற கலந்து இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் பாலமாக அமைய வேண்டுமானால் இளைஞர்களிடையே விரைந்த சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களிடையே மறைந்துள்ள தொழில்முனைவோர் தகுதிகளை கட்டமைக்க வேண்டியது அரசின் கடமையாகும். இந்திய மக்கள் தொகையில் பெரும் பங்கு வகிக்கும் இளைஞர்கள் தலைவராகி நாட்டை வழிநடத்தும் திறன் படைத்தவர்களாகும் போதுதான் இத்தகைய குறிக்கோளை நம் நாடு எய்தி தற்காலத்திற்கேற்ப சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு பலவித மாற்றங்களை செய்ய இயலும். மேலும், உலகமயமாக்கலில் மிகப் பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவை வழி நடத்திச் செல்ல இளையதலைமுறையினர் பங்கு அளப்பரிய தேவை உடையதாகிறது. விரைந்து வளரும் உலகத்தில் இந்திய இளைஞர்களின் திறமைகளைப் பலப்படுத்தி வெளிப்படுத்த வேண்டியது இக்கால தலைவர்களின் கடமையாகும். எனவே, அரசியல்வானில் மின்னி தடம்பதித்த முதிர்ந்த அரசியல் தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விட்டு அவர்கள் உள்நாட்டு, வெளியுறவு அரசியல் நடவடிக்கைகளில் பங்குபெற வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களும் தெளிவான சிந்தளைகளைப் பெற்று தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால இளைஞர்களின் நாட்டங்களையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து மக்கள் தொண்டாற்ற இயலும்.
துரதிருஷ்டவசமாக அரசை வழிநடத்திச் செல்லும் முதிர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களின் தலைமை பதவியையும், புகழையும் இளைஞர்களிடம் விட்டுக் கொடுத்து ஓய்வெடுக்க தயாராக இல்லை. அடையாள வாரிசு அரசியலும், இடஒதுக்கீட்டு முறைகளும் 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் இளைஞர்களை அலைகழிக்கும் பிரச்னைகளான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சமுதாய வளர்ச்சி ஆகியவற்றில் அரசு உத்வேகம் காட்ட வேண்டியது அவசியமாகும். அதனால் உண்டாகும் விளைவுகளை துணிவுடன் சந்தித்து, சாவல்களை சமாளித்து பிரச்னைகளை தைரியத்துடன் எதிர்கொள்ளும் இளைஞர்கள் படை தேவை. இந்திய இளைஞர்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள். இக்கால மற்றும் எதிர்கால சந்ததியினர் உலக அரங்கில் போட்டியிட்டு வெற்றி கொடியை நாட்ட வேண்டுமானால் முதிர்ந்த அரசியல் தலைவர்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் இளைய தலைமுறையினருக்கு வழி காட்ட வேண்டிய பொறுப்பில் உள்ளார்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் உலக அளவில் பல சவால்களை சமாளிக்க தயாராக இருக்கிறது. இளைஞர்கள் எவ்வாறு உள்ளார்களோ அவ்வகையில்தான் எதிர்கால இந்தியா அமையும்.
இன்றைய இளைஞர் சமுதாயம் நாளைய சரித்திரம் படைக்க வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன், அறிவுத் திறன் மற்றும் அறிவுக் கூர்மை ஆகியவற்றை திறம்பட பயன்படுத்தி அவர்கள் தவறான எண்ணங்களிலும், செயல்களிலும் ஈடுபடாமல் எதிர்கொள்ளும் சாவல்களை சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பகத் சிங், கொடி காத்த குமரன், சுபாஷ் சந்திர போஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகியோர் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த வீர இளைஞர்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இக்கால இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்க வேண்டுமானால் இளையதலைமுறையிருக்கு முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழி விட்டு அவர்களுக்கு தங்களின் அனுபவ அறிவை போதித்து வழிகாட்ட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.