மானம் அவமானம் தன்மானம்

மதுரை மாவட்டத்தில் ஒரு வழக்கு உண்டு. நெல், உளுந்து போன்ற தானியங்களை அளந்து போடும்போது மானத்தைப் பயன்படுத்துவர்.
மானம் அவமானம் தன்மானம்
Updated on
2 min read

மதுரை மாவட்டத்தில் ஒரு வழக்கு உண்டு. நெல், உளுந்து போன்ற தானியங்களை அளந்து போடும்போது மானத்தைப் பயன்படுத்துவர். படி, மரக்கால் என்று தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் வழங்குவதையே, மதுரைக்காரர்கள் "மானம்' என்கின்றனர். ஆக, "மானம்' என்பது "அறிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. "வருமானம்' நாம் அறிவோம் அல்லவா? அதற்கு வரி செலுத்தினால், அதுவே வருமானவரி ஆகிவிடுவதைப் பார்க்கின்றோம்.

"மானம்' என்ற சொல்லின் அடிச்சொல் "மான்' ஆகும். மான் என்பது காட்டு விலங்கினைக் குறிக்கும். ஒரே ஒரு முடி தன் உடலிலிருந்து விழுந்தால்கூட, உயிரை விட்டுவிடுமென்று திருக்குறள் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா' என்கிறது. "மா' பொதுவாக விலங்கினைக் குறித்தாலும், கவரிமா என்னும்போது, மானைத்தான் கூறுகிறது. திருவள்ளுவரும் "மானம்' என்றோர் அதிகாரமே ஒதுக்கியுள்ளதையும் அறிவோம். மானம் மனிதரோடு தொடர்புடையது என்பதற்கு ஏராளமான சான்றுகள் சொல்லலாம்.

சிறைப்படுத்தப்பட்ட அரசன் ஒருவன், நீர் வேட்கை தணிக்க காவலாளியிடம் வேண்டியபோது, வாயில்காவலன் தன் இடக்கையால் கொடுத்த நீரை வாங்கவில்லை. கதவருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டான். மறுநாள் காலை வாயில்காவலன் தான் வைத்த இடத்திலேயே குவளைநீர் இருக்கக்கண்டதும், சிறையறைக்குள் உற்று நோக்கும்போது மானமுள்ள அரசன் இறந்து கிடந்தான். வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர்) "மான விஜயம்' என்றொரு நாடக (கவிதை) நூலை இயற்றியுள்ளார். மனிதரோடு தொடர்புடைய "மான'த்தை "மரியாதா / மரியாதை' என்றும் பேச்சுவழக்கில் காண்கிறோம். ஒருவனைத் திட்டும்போது (வசை மொழி) "மானங்கெட்டவனே' என்றும், ஆற்ற முடியாச் சினத்தில் "மரியாதையைக் கெடுத்திடுவேன்' என்றும் கூறக்கேட்டுள்ளோம். "மான்மரியாதா' என்று தெலுங்கு மற்றும் பிறமொழியில் இரண்டையும் இணைத்து சொல்வார்கள்.

மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டால், "அவமானம்' பண்ணிவிட்டான் என்கின்றனர்; அல்லது அவமதித்துவிட்டான் என்கின்றனர். ஆக "மானம்' என்பது "மதிப்பு' என்ற சொல்லோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. "எனக்கு என்ன மரியாதை இருக்கு?' என்று வீட்டிலிருப்பவர் மற்றவர்களைக் கேட்கும்போது, கேட்டவருக்கு "மதிப்பு' கொடுக்கவில்லை என்று பொருளாகிறது. அவமானம் என்பது அவமரியாதை அல்லது மதிப்பின்மை என்று கொள்ளலாம்.

"மானி' என்பது மானமுள்ளவனுக்கு நாம் இடும்பெயர். வெப்பத்தை அளக்கும் கருவியை வெப்ப (உஷ்ண) மானி என்று படித்திருக்கின்றோம். "மானி' இங்கு "அளவி'தான். எல்லார்க்கும் மானம் உண்டு; எல்லாரும் மானிகளே. பின் தன்மானம் என்று ஏன் சொல்லுகிறோம். இங்கே "சுயகவுரவம்' என்ற பிறமொழிச் சொல்லை இணையாகக் கொள்ளலாம். பாரதக் கதையிலுள்ள "கவுரவர்கள்' என்ற பெயரிலிருந்து "கவுரவம்' என்ற வழக்கு உண்டானது என்பதில் அய்யமில்லை. "சுயமரியாதை'யின் நேரடித் தமிழாக்கமே தன்மானம் என்பது. எது எது தன்மானத்தில் சேரும் அல்லது எவை எவை தன்மானத்தைக் கொடுக்கும் என்பதற்கு மக்களிடையே விளக்கம் காணலாம்.

திருட்டுக் குற்றம் அறமன்றத்துக்கு (பஞ்சாயத்து) வரும்போது மதிப்பு கெடுகிறது. அதைத் "தன்மான' மேலீட்டால், கட்டுப்படாமல் வழக்குமன்றம் வரை சென்று பொருள் இழப்பை சந்திக்க நேரிடும்போது, இன்னும் "கேவலம்' என்பர். தண்டம் (டங்ய்ஹப்ற்ஹ்) கட்டினால், ஒருவனுடைய மானம் கெடுவதாக ஏசுவார்கள். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் உண்டானால், "மானம்' போய்விட்டதாகப் பேசுகின்றனர். "மான'த்தால் தற்கொலை நிகழ்வுகள் ஒரு காலத்தில் அன்றாட நிகழ்வாயிருந்தது. காதல் விவகாரங்களில் சாதிமாறி அவளும் அவனும் ஓடிவிட்டால், "மானம்' போய்விட்டதாக, ஓடினவர்களும் கொல்லப்படுகின்றனர். சில பெற்றோர்களும் தற்கொலையில் தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

படிப்பறிவு இல்லாத பண்டைய நாளில், வீட்டு வேலைகளைச் செய்து உண்டு வாழ்ந்து நாள்களைக் கடத்தினவர்களுக்கு "தன்மான'த்தின் முழு உருவம் மிகக்குறைவாகத்தான் தெரிந்திருந்தது. கல்வியின் பொருட்டும், மாத ஊதியம் பெறும் வேலையின் பொருட்டும், வணிக நோக்கிலும் வெளியூருக்கோ அக்கரைக்கோ செல்லுகிற சூழலை எண்ணிப்பாருங்கள். சென்ற இடத்துச் சூழலில், வாழ்வாதாரத்துடன் துணை தேவைப்படுகையில், ஊறும் உறவும் நினைத்துப்பார்க்க நேரமில்லை. எனவே, அங்கங்கே மணவினை முடுத்துக்கொண்டு வாழத்தலைப்பட்டதற்கும் வரலாறு உண்டு. மொரீசியஸ் தீவில் இன்றுள்ள அனைவரும் தாய்மொழியையே (தமிழை) மறந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

இஃது இப்படியிருக்க, நகர்ப்புறத்திற்கு பணியாற்ற வந்த இடத்தில், உடன் பணிபுரியும் பெண்ணொருத்தியுடன் நல்ல புரிந்துணர்வில் துணைவர்களாக, கணவன் - மனைவியாக குடும்பம் நடத்துவதற்கு எத்தனை பெற்றோர்கள் ஒத்துழைக்கின்றனர்? மிகச்சிலரே! அதனால் "கவுரவம்' என்ற பெயரில் பிள்ளைகளை மறந்து, பெண்களைத் துறந்து, நடைப்பிணங்களாய் நடமாடும் பெற்றோர்களை ஏராளமாய் காண்கிறோம். இதுதான் தன்மானத்திற்கு மக்களைப்பெற்ற "மகா' பெற்றோர்கள் கூறும் விளக்கவுரையா என்று கேட்கத் தோன்றுகிறது. வரட்டுக் கவுரவம் பேசிப்பேசியே அழிந்து கொண்டிருக்கிறார்களே, அது ஏன்?

பறவை இனத்தில் கூடுகட்டத் தெரியாத பறவை குயில் ஒன்று. தன் முட்டையைக் காகத்தின் கூட்டில் இட்டுச் செல்லும். காகமும் தன் முட்டைகளை அடைகாப்பதுபோல் குயிலின் முட்டையையும் காத்து, குஞ்சானதும் விலக்கிவிடும். இந்த இடத்தில், குயில் "தன்மானம்' பார்ப்பதில்லை. ஆனால் அது தன்மானம் பார்க்கிற இடம். தான் உணவு எடுக்கும்போதுதான். எந்தச் சூழலிலும் குயில் மரத்தை, மரக்கிளையை விட்டு இரைக்காக கீழிறங்காது என்பதுதான் உண்மை. அப்படி குயில்போல ஏதாவது ஒரு பறவையைத் தரையில் பார்க்க நேர்ந்தால், அது குயில் அல்ல; அந்த இனத்தைச் சேர்ந்த "செண்பூகம்' என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மானம், அவமானம், தன்மானம் இவற்றோடு மற்றொன்றும் இருக்கிறது. அது அபிமானம். "அப்மான்' என்ற பிறமொழிச் சொல்லே, தமிழில் அபிமானம் என்று ஆகியுள்ளது. அதற்குப் "பற்று' என்று பொருள். "பாஷாபிமானம்', "தோசாபிமானம்' என்பவை மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும் குறிப்பன.

வெ. சுப்பிரமணியன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com