

இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டமானது இயற்றப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளாகிறது. இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையங்களை அமைப்பது, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பாக பல பிரச்னைகள் நிலவுகின்றன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோது மாநில தகவல் ஆணையங்களை அமைப்பது மாநில அரசுகளின் பொறுப்பானது. அவ்வாறில்லாமல் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் மாநில மனித உரிமை ஆணையங்களை அமைப்பது என்பது மாநில அரசுகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்ற நிலை இருந்ததால்தான் மாநில அரசுகள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாநில மனித உரிமைகள் ஆணையங்களை அமைப்பது கால தாமதமானது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் பலமுறை வலியுறுத்தியும் சில மாநில அரசுகள் மாநில மனித உரிமைகள் ஆணையங்களை அமைக்காமல் உள்ளன.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைவராகவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, மனித உரிமை ஆர்வலர் ஆகிய மூவரும் உறுப்பினராகவும் இருக்க வேண்டுமென மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உள்ள குழுவில் மாநிலத்தன் முதல் அமைச்சர் தலைவராகவும் சட்டமன்ற சபாநாயகர், உள்துறை அமைச்சக பொறுப்பை வகிக்கும் மாநில அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட அவர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளை தேர்வு செய்வது பல மாநிலங்களில் சிரமமாக உள்ளது. ஏனெனில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் பலர் தீர்ப்பாயங்களின் தலைவராகவும் சட்ட ஆணையம் போன்ற ஆணையங்களின் தலைவர்களாகவும் சென்று விடுகிறார்கள். இத்தகைய பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி இருந்தாலே போதுமானது என்று சட்ட திருத்தம் செய்வது அவசியமாகும்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஒரு மனித உரிமை ஆர்வலருக்கு பதவி வழங்கப்படுகிறது. இச்சட்டம் இயற்றப்பட்டபோது இரண்டு உறுப்பினர்கள் இப்பிரிவின் கீழ் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு இப்பிரிவில் ஒரு உறுப்பினரே நியமனம் செய்யப்படுகிறார். சில மாநிலங்களில் இன்னும் இரண்டு உறுப்பினர்கள் மாநில சட்டதிருத்தங்கள் மூலமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை வழக்குகளை விரைவில் விசாரிக்க இப்பிரிவின் கீழ் இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு தக்க சட்டதிருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
மனித உரிமை ஆணையங்களில் ஏற்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான காலியிடங்களை தவிர்ப்பதற்காக இப்பதவிகளில் உள்ளவர்கள் ஓய்வுபெறுவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே மற்ற அரசுப் பணிகளுக்கு செய்யப்படுவது போல விளம்பரம் செய்து தக்க நபரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று தகுதியான நபரை தேர்வு செய்து பதவியில் உள்ளவர் ஓய்வு பெறும் நாளிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்பதவியில் அமரும் வண்ணம் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை மாநில அரசுகள் செய்யத் தவறும்போது இதற்கான அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டு இப்பதவி காலியாகும்போது அதிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் அப்பதவிகளில் தகுதியான நபர்களை மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறான சட்டதிருத்தத்தை கொண்டு வந்தால் மாநில அரசுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உடனடியாக நியமனம் செய்வர். இதன்மூலம் தங்களது அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிடக்கூடாது என்று கருதுவர்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் குழுவானது முற்றிலும் அரசியல் சார்ந்த தலைவர்களையே கொண்டுள்ளது. இத்தகைய நிலையால் ஆளும் கட்சியினர் நினைக்கும் நபரையே இப்பதவியில் நியமனம் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனை தவிர்ப்பது மிக அவசியமானது.
ரயில்வே, கலால், வருமான வரி போன்ற அரசின் துறைகளில் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமனம் செய்யப்படுகிற உச்சநீதிமன்ற நீதிபதி இருப்பார் என அதற்குரிய சட்டங்கள் தெரிவிக்கின்றன. இக்குழுவின் உறுப்பினர்களாக சட்டத்துறையின் செயலாளர், தீர்ப்பாயம் செயல்படுகின்ற துறையின் செயலாளர் போன்றவர்கள் உள்ளனர். இதன் மூலம் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடு என்பது இத்தீர்ப்பாயங்களில் தவிர்க்கப்பட்டுள்ளன.
இதைப் போலவே மாநில மனித உரிமைகள் ஆணைய நியமனக் குழுவின் தலைவராக அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமனம் செய்யப்படக்கூடிய உயர்நீதிமன்ற நீதிபதி இருக்க வேண்டும். இதன் உறுப்பினர்களாக சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் போன்றோர் இருக்கவேண்டும். இப்பதவிகளில் காலியிடங்கள் ஏற்படும்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் ஆறு மாதங்களுக்கு முன்பே இது குறித்து நியமனக் குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சட்டதிருத்தத்தை மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் செய்தால் மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வாய்ப்புண்டு.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்டறிந்த பின்னர்தான் பதவிநீக்கம் செய்ய முடியும். இதுவரை எந்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் வழங்கலாம். இந்த அதிகாரமானது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று செய்யப்படத்தக்கதாக இருக்க வேண்டும். இந்த ஆலோசனை என்பது உயர்நீதிமன்றத்தில் சட்டப்படி விசாரிக்கப்பட்டு வழங்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த விசாரணையானது ஒரு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான நியமனங்களில் வெளிப்படைத் தன்மையும் அரசியல் தலையீடு இல்லாத நிலையும் ஏற்பட இத்தகைய திருத்தங்கள் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.