உணவை வீணாக்குவது தேசியக் குற்றம்!

ஆசையை அடக்கு' என புத்தர் கூறினார். ஆனால், எந்த தத்துவ ஞானியும் "பசியை அடக்கு' என சொல்லவேயில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் சன்மார்க்க சபையைத் தொடங்கியது "பசிக்குப் புசி' என்பதற்கிணங்க பசித்தவர்களுக்கு உணவு வழங்கத்தான்.
உணவை வீணாக்குவது தேசியக் குற்றம்!
Updated on
3 min read

ஆசையை அடக்கு' என புத்தர் கூறினார். ஆனால், எந்த தத்துவ ஞானியும் "பசியை அடக்கு' என சொல்லவேயில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் சன்மார்க்க சபையைத் தொடங்கியது "பசிக்குப் புசி' என்பதற்கிணங்க பசித்தவர்களுக்கு உணவு வழங்கத்தான். ஒரு பொருள் இல்லாதபோதுதான் அதன் அருமை நமக்குத் தெரியும். அதுபோல சாப்பாட்டின் அருமையை பட்டினியால் வாடும்போதுதான் தெரியும்.

நமது நாட்டின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்களைக் கடந்து தன்னிறைவு பெற்றுள்ளோம். ஆனால், மறுபுறம் 20 சதவீத மக்கள் தேவைக்குக் குறைந்த அளவே உண்கின்றனர். இது என்ன முரண்பாடு? இந்தியாவிலுள்ள மொத்த மக்கள்தொகையான 120 கோடியில் சுமார் 40 கோடி பேர் பசியில் உழன்று வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்.

உலக அளவில் மொத்த தானிய சாகுபடிப் பரப்பளவிலும், உற்பத்தியிலும் முன்னணியில் இருக்கும் நாம் விளைச்சலில் (ஒரு ஹெக்டேரில் உற்பத்தி செய்யப்படும் தானிய அளவு) மிகவும் பின்தங்கியே உள்ளோம். எடுத்துக்காட்டாக நம்நாடு நெல் பயிரிடும் பரப்பில் முதலிடத்திலும், உற்பத்தியில் இரண்டாமிடத்திலும், விளைச்சலில் 35}ஆம் இடத்திலும் உள்ளது. இதுபோல பயிறு வகைகளில், பரப்பளவிலும் உற்பத்தியிலும் முதலிடத்தில் இருக்கும் நாம் விளைச்சலிலோ 118}ஆம் இடத்தில் உள்ளோம். இப்படி விவசாயிகள் அரும்பாடு பட்டு உழைத்து விளைவிக்கும் உணவுப் பொருள்களை நாம் வீணாக்குவதை தேசியக் குற்றமாகக் கருத வேண்டும்.

உணவு தானியங்கள் உற்பத்தி செய்யத் தேவைப்படும் தண்ணீரின் அளவு மிக மிக அதிகம். ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய சுமார் 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. பயிர்கள் விளைந்து அறுவடை செய்யும்போது சுமார் இரண்டு முதல் பத்து சத அளவு வீணடிக்கப்படுகிறது. பின்னர் கொண்டு செல்லுதல், உணவு கிடங்குகளில் சேதம் என சுமார் 20 முதல் 30 சதம் தானியங்கள் வீணாகின்றன. இவை தவிர, ஒவ்வொரு வீட்டிலும், சமுதாய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களிலும் நாம் வீணாக்கும் சமைத்த உணவு வகைகள் கணக்கிலடங்கா. உண்மையில் இவை வீணான உணவு அல்ல. வீணாக்கப்பட்ட உணவுகள்.

தற்போது நாம் நவீன உலகில் வாழ்ந்து வருகிறோம். கணினி, மடிக்கணினி, இணையதளம் என தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட சூழ்நிலையில், நம்மில் பலருக்கு விவசாயத்தின் அருமையும் உடலுழைப்பின் அடிப்படையும் அதன் கஷ்டங்களும் தெரிவதில்லை.

திருமணம் போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், பயிற்சிகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் உணவு வீணாக்கப்படுகிறது. மீதமான உணவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு செல்பவர்களைக் கண்டால் கோபம் வரத்தான் செய்கிறது. தாங்கள் வீணாக்கும் உணவு பட்டினி கிடக்கும் மக்கள் பலரின் பசியைப் போக்கும் அருமருந்து என்பதை அவர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

உலகில் பட்டினியால் வாடும் மக்களில் நான்கில் ஒரு பகுதி இந்தியாவில்தான் உள்ளனர். உலகின் ரத்தசோகை பாதிப்பில் முக்கால் வாசி மனிதர்கள் இந்தியர்கள். ஊட்டச்சத்து குறைபாட்டினால் உலக அளவில் தினமும் செத்துமடியும் சுமார் 15,000 குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியான 5,000 குழந்தைகள் இந்தியக் குழந்தைகளே.

இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடி பேர். இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 52 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கும் சரிவர ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

இந்தியாவில் குறைந்த உடல் எடையுடன் (அதாவது 2.5 கிலோவிற்குக் குறைவாக) பிறக்கும் குழந்தைகள் பாதிப் பேர். உலகிலுள்ள 120 அதிகப் பசியான நாடுகளில் இந்தியா 15}ஆம் இடத்தில் இருக்கிறது.

உலகில் ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி டன் உணவு தானியம் வீணாகிறது. உலக அளவில் உணவுப் பண்டங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. இப்படி வீணாகும் உணவுப் பண்டங்கள் மூலம் 50 கோடி மக்களுக்குக் கூடுதலாக உணவிட முடியுமாம். உலகின் மொத்த மக்கள்தொகையில் 86.8 கோடி பேர் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் ஒவ்வொரு வருடமும் தொழில் வளர்ச்சி மிக்க நாடுகளில் சுமார் 36.57 லட்சம் கோடி (68,000 கோடி அமெரிக்க டாலர்) மதிப்பிலான உணவுப் பொருள்களும், வளரும் நாடுகளில் 16.67 லட்சம் கோடி (31,000 கோடி அமெரிக்க டாலர்) மதிப்பிலான உணவுப் பொருள்களும் வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை 2005 முதல் 2013}ஆம் ஆண்டு வரை 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக இந்திய உணவுக் கழகத்தின் தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில் 2008-2009}ஆம் ஆண்டில் வீணாகிய உணவுப் பொருள்களின் அளவு 58,000 டன்னாக இருந்தது. இது 2009-10}இல் 1,31,000 டன் ஆகவும், 2010-11}ஆம் ஆண்டில் 1,56,000 டன்னாகவும் உயர்ந்துள்ளது.

ஒரு பொருள் விளைநிலத்திலிருந்து வியாபாரியின் கைக்குச் சென்று, பின்னர் நுகர்வோரின் கைக்கு மாறும்போது சுமார் 50 சதவீத அளவு வீணாகிறது என ஓர் ஆய்வு கூறுகிறது. இந்திய உணவுக் கழக கிடங்குகளில் 2008}ஆம் ஆண்டில் அதிக ஈரம், எலிகள், பறவைகள் மற்றும் பல சேதங்களாலும் சுமார் 36,000 டன் உணவு தானியங்கள் வீணாகிவிட்டன.

இந்த வீணான உணவு தானியங்களால் சுமார் எட்டு கோடி மனிதர்களுக்கு (ஒரு நாளுக்கு ஒரு மனிதன் உட்கொள்ளும் அளவு 440 கிராம் என்ற வீதத்தில்) உணவு வழங்க முடியும் என கணக்கிட்டுள்ளனர்.

இந்த இழப்புகளில் பஞ்சாப் (19,290 டன்) முதலிடத்தில் அடுத்து மேற்கு வங்கமும் (4,545 டன்) குஜராத்தும் (4,290 டன்) உள்ளன. இந்திய உணவுக் கழக கிடங்குகளில் கடந்த ஆண்டு மட்டும் 87,000 டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளன. 1997 முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சுமார் 1,83,000 டன் கோதுமையும், 6,33,000 டன் நெல்லும், 1,11,00 டன் மக்காசோளமும் வீணாகி விட்டதாக ஒரு தகவல் குறிப்பிடுகிறது.

உணவு தானியங்கள் வீணாவதைத் தடுக்க விளைபொருள்களை சேமிக்க உரிய கிடங்கு வசதிகளை நவீன தொழில்நுட்பத்துடன் அனைத்த பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருப்பனவற்றை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com