

எண்ணத்தால், குணத்தால், செயலால் வேறுபட்ட மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்து, சேர்ந்து வாழ்வதே சமுதாயம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்வதே நம் நாட்டின் பாரம்பரியமாகும்.
ஹிந்து சமயமாகவோ, கிறிஸ்துவ சமயமாகவோ, இஸ்லாமிய சமயமாகவோ எதுவாக இருந்தபோதிலும் அது இறைவனோடு தொடர்புடையது. இறை பக்தி உள்ள மனிதன் நல்ல வகையில் வாழ முயற்சிக்கிறான். எனவே, மதம், சமயம் என்பது மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் அடிப்படையான ஒன்று.
சமயச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சமுதாயத்துக்குத் தேவையான ஒன்று. உழைத்து உழைத்துக் களைத்துப்போன மனிதனுக்கு மகிழ்ச்சியை ஊட்டவல்லது சமய சம்பந்தமான திருவிழாக்கள்.
ஆனால், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரத்தில் நடந்துள்ள கொடுமையை என்னவென்பது? மூன்றாண்டுகளாகத் திருவிழாவுக்கும் தடை. இன்றோ, வன்முறைக் கும்பல்களால் தேரும் எரிந்தது. பலர் வீடுகளும் எரிந்து சாம்பலாயின.
இவற்றுக்கெல்லாம் ஜாதி, சமயப் பொறையின்மையே காரணம். மனிதர்கள் தத்தம் மதம், ஜாதி, சமயத்தைப் பெரிதெனப் போற்றுவதில் தவறில்லை. ஆனால், பிற ஜாதி, சமயங்களை, சம்பிரதாயங்களைக் குறை கூறக் கூடாது, குறை கூற வேண்டிய அவசியமும் இல்லை.
"எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், இயேசு கிறிஸ்துவின் கால்களை என் கண்ணீரால் கழுவுவேன்' என்று கூறிய விவேகானந்தரின் சமயப் பொறை மனித சமுதாயத்துக்கு மிகவும் தேவை.
மகாகவி பாரதியார், "சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடியதை, வெறும் ஏட்டுச் சுரையாக்கி விடாமல் நடைமுறையில் நாம் பின்பற்ற வேண்டும்.
அரசியல்வாதிகள் பலர் வாக்கு வங்கிக்காகவும், விளம்பர வெளிச்சத்துக்காகவும் ஜாதி வெறி அரசியல் நடத்துகின்றனர். பெரும்பாலான பாமர மக்கள் அரசியல்வாதிகளின் கபடப் பேச்சுகளுக்குப் பலியாகிவிடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது முன்னோர்கள் பலரும், அண்மைக்காலத்தில் மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை பற்பல மகான்களும் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களை வெற்று வார்த்தைகளாலும், வீண் கோஷங்களாலும் புகழ்வதில் புண்ணியமில்லை. அவர்கள் வாழ்ந்து காட்டிய நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி, நாட்டில் அமைதி நிலவ பாடுபடுவதே, நாம் அவர்களுக்குச் செலுத்தும் சிறப்பான நன்றிக் கடனாகும்.
வாக்கு வங்கி அரசியலை விட்டுவிட்டு, நாட்டு நலனைக் குறிக்கோளாகக் கொண்டு அரசியலில் ஈடுபட்டால், ஜாதி வெறி, ஜாதிச் சண்டை போன்ற கலவரங்கள் தாமே அகன்று விடும்.
சி.கஸ்தூரி ரத்தினம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.