

நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் தாய், சேய் மரணத்துக்கும் முக்கிய காரணமாக இளம் வயதுத் திருமணம் உள்ளது. மலைவாழ் மக்களிடையே இன்னும் இளம் வயதுத் திருமணம் அதிகமாகக் காணப்படுகிறது.
20-24 வயதில் திருமணம் புரிவோருடன் ஒப்பிடுகையில், மகப்பேறு மரணம் 15 -19 வயதில் இரு மடங்கும், 15 வயதுக்குள் 5 மடங்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் இருந்த பால்ய விவாகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது 12 என 1891-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம் இந்திய மரபுகளுக்கு எதிரானது என மக்கள் தெரிவித்தனர்.
குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக முதன்முதலில் நாடாளுமன்றத்தில் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 1929 இயற்றப்பட்டது (சாரதா சட்டம்). இச்சட்டமானது, 15 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 18 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்துவதைத் தடை செய்தது.
சுதந்திர இந்தியாவில் பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ள உரிமை உண்டு என 1948-இல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்திய திருமணப் பதிவு மற்றும் விவாகரத்து சட்டம் 1955-இல் கொண்டு வரப்பட்டது. இதன்படி, திருமண வயது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், திருமணத்தைப் பதிவு செய்வதும், விவாகரத்து பெறுவதும் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டது.
1978-ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் திருத்தப்படி, உரிய வயதுக்கு முன் திருமணம் புரிவோர், அவர் தம் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
18 வயது நிறைவடையாத பெண், 21 வயது நிரம்பாத ஆண் ஆகிய இரு பாலர்களின் திருமணங்கள் சட்டப்படி குற்றமாகும். எனினும், பெற்றோரின் வறுமையும், வரதட்சிணை கொடுக்க முடியாத நிலையும் குழந்தைத் திருமணத்துக்கு முக்கிய காரணம். பெற்றோரின் கடமை முடிவதோடு குடும்பச் சுமை குறைவதாக எண்ணுகின்றனர்.
பெண்களுக்கு இளமையிலேயே திருமணம் முடிப்பதால் அவர்களுக்குப் பாலியல் பாதுகாப்பு கிடைப்பதாக நம்புகின்றனர்.
வயதுக்கு வந்த பிள்ளைகளை வெளியில் அனுப்பும்போது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
ஒரு குடும்பத்துக்குள்ளே சொத்துகளை முடக்கி வைத்துக் கொள்வதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இன்றைய ஊடகங்கள் அனைத்தும் பாலியலைத் தூண்டும் விதமாகவே இருக்கின்றன. தம் பிள்ளைகளுக்கு வக்கிரமான சிந்தனை இல்லாவிட்டாலும், சேர்க்கையில் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளதாக எண்ணுகின்றனர். இவை போன்றவையே இளம் வயதுத் திருமணங்களுக்குக் காரணமாகின்றன.
இளம் வயதுத் திருமணத்தால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாமலிருத்தல், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், குழந்தைகள் எடை குறைவாகப் பிறத்தல், குழந்தைகள் இறந்தே பிறத்தல், பிரசவத்தின்போது தாய், சேய் மரணம் நேரிடுதல், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெண் தயார் ஆகாததால் குடும்பத்தில் அனுசரித்துப் போகும் ஆற்றல் குறைவாக இருத்தல், சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் இல்லாமல் இருத்தல், கணவர் இறந்தால் இளம் வயதில் விதவை ஆகுதல், பாலியல் தொல்லைகள், கெüரவக் கொலைகள், கல்வியில் தடை ஏற்படுதல், வருவாய் இழப்பு, பொருளாதார நலிவு போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இளம் வயதுத் திருமணத்தைத் தடுப்பதற்காக அரசு பல விதமான நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கல்லூரி வரை இலவசக் கல்வி, மேல்நிலைப் பள்ளி கல்வி பயிலும் மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி, 6-ஆம் வகுப்பு முதல் மேல்நிலைக் கல்வி வரை படிக்கும் மாணவியர்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை, கல்லூரிப் படிப்புக்கு ரூ.2,000 ஊக்கத் தொகை, இலவசப் பேருந்துப் பயணச் சலுகை, 18 வயது முடிந்த பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு அரசின் திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம், பட்டம், பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்குத் திருமணத்தின்போது ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்வதை உறுதிப்படுத்துதல், பெற்றோர்க்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் திருமண வயது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திருமணம் நடைபெறும் கோயில்கள் - மண்டபங்களில் மணமக்களின் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் பெற்று பதிவேட்டில் பதிவதைக் கட்டாயமாக்குதல், அனைத்துப் பெண்களும் மேல்நிலைக் கல்வி அல்லது பட்டப் படிப்பு பெறுவதை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் பெண் கல்வி விகிதம் அதிகமாக உள்ள கன்னியாகுமரி (89.9%) மாவட்டத்தில் பெண்களின் சராசரி திருமண வயது 23.2. பெண் கல்வி விகிதம் குறைவாக உள்ள தருமபுரி (59.8%) மாவட்டத்தின் பெண்களின் சராசரி திருமண வயது 19.3 ஆகும்.
தமிழ்நாட்டில் இளம் வயதுத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அடிக்கடி செய்திகளில் காண்பது போற்றப்பட வேண்டியதாகும். சென்ற மாதத்தில்கூட ராஜஸ்தான் மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் 6 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாகச் செய்தி பத்திரிகைகள், கட்செவி அஞ்சல் மூலம் தெரியவந்தது.
இந்திய திருமணப் பதிவுச் சட்டம் சராசரியாகத் திருமண வயது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என சொன்னாலும், மருத்துவரீதியாக ஆணுக்கு 25 வயதிலும், பெண்ணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்வது சிறப்பானது.
சிறுமியைத் திருமணம் செய்யும் 18 வயது நிரம்பிய ஆணுக்கு அதிகபட்சமாக 2 வருட கடும் சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருட கடும் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பெற்றோர், பாதுகாவலர், எந்தத் தனி நபரும் குழந்தைத் திருமணத்தை ஆதரித்தாலோ அல்லது திருமணத்தில் கலந்து கொண்டாலோ அதிகபட்சமாக 2 ஆண்டு கடும் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறை வாசம் கிடையாது.
குழந்தைத் திருமணம் நடைபெறுவதற்கு முன்னரோ அல்லது நடைபெற்ற பின்னரோ காவல் துறை, குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர், முதல் வகுப்பு நீதிபதி அல்லது பெருநகர் நீதிபதி, குழந்தைகள் நல குழுமம் (சமூக நலத் துறை), மாவட்ட நீதிபதி, பஞ்சாயத்து கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் (பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், சமூக நல விரிவாக்க அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியர், சுய உதவிக் குழுக்களின் செயலாளர், பெண் வார்டு உறுப்பினர்) ஆகியோரிடம் யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்.
ஆணுக்கு நிகராக பெண்ணையும் படிக்க வைப்போம். இளம் வயதுத் திருமணத்தைத் தடுப்போம்.
கோ. சக்கரை, சேலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.