கல்வியின் நோக்கம் என்ன?

தனி மனிதனின் வாழ்வை அறிவின் துணையுடன் முழுமையடையச் செய்யும் செயல் முறையே கல்வி. கல்வியானது மனிதனுக்குள்
கல்வியின் நோக்கம் என்ன?
Updated on
2 min read

தனி மனிதனின் வாழ்வை அறிவின் துணையுடன் முழுமையடையச் செய்யும் செயல் முறையே கல்வி. கல்வியானது மனிதனுக்குள் உணர்வாகக் கலந்து, வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளிலும் அன்பின் வடிவமாக பொதுநலம் என்ற மனப்பாங்குடன் வெளிப்படுத்தப்படும் போதுதான் கற்றதன் பயன் முழுமையடைகிறது.
 பல நூற்றாண்டுகளுக்கு முன் வரை எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு உள்பட கலை, அறிவியல் கல்வி முறைகளையும் உள்ளுணர்வோடு கற்கும், கற்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இவ்வாறு ஐம்புல உணர்வுகளால் கிடைக்கும் அனுபவக் கல்வி மட்டுமே நமது உயிரில் கலந்து என்றும் அழியாதிருந்து வாழ்க்கையை வளப்படுத்த உதவும்.
 தெளிவான புரிதலும் நுட்பமான செயல்பாடுகளுமின்றி மாணவர்களிடம் விடைகளைத் திணித்து, தேர்வு நேரத்தில் அவற்றை விடைத்தாள்களில் நிரப்பப் பயிற்சியளிக்கும் இன்றையக் கல்வி முறை எப்படி மாணவர்களின் உயிரில் கலந்து தனக்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் என்பது புதிராகவே உள்ளது.
 ஆங்கிலேய ஆட்சியின்போது வடிவமைக்கப்பட்ட மெக்காலே கல்வி முறையைவிட, இந்திய கல்வி முறையே தரத்தில் உயர்ந்து காணப்பட்டதை வரலாறுகள் உணர்த்துகின்றன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிகார் மாநிலத்தில் செயல்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், திபெத், சீனா, பாரசீகம் என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்த மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் கல்வி வழங்கி இந்தியாவின் கல்விப் பெருமையை உலகறியச் செய்தது.
 இந்திய மாணவர்கள் வெகு சிலரே இன்று சர்வதேச அளவில் வியத்தகு சாதனைகள் செய்வதைக் காணமுடிகிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது கல்வி சர்வதேசத் தரத்தில் உள்ளதெனக் கருதிவிட முடியாது.
 லண்டனின் "தி டைம்ஸ்' இதழ் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதல் 250 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை. ஆசிய அளவிலான பட்டியலில் மட்டும் ஒன்பது இந்திய கல்வி நிறுவனங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன.
 பெங்களூரு, இந்திய அறிவியல் கல்விக் கழகம் (ஐ.ஐ.எஸ்.சி.), பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியன இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களையும், ரூர்க்கி, மும்பை, தில்லி, கரக்பூர், சென்னை ஆகிய ஐ.ஐ.டி.க்கள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியனவும் ஆசிய அளவிலான தரப்பட்டியலில் மட்டும் இடம் பெற்று முதல் நூறு இடங்களுக்குள் வந்
 துள்ளன.
 உலக நாட்டவர்க்கே கல்வி கற்பித்த இந்தியா, இன்று சர்வதேசத் தரப்பட்டியலில் ஒரு கல்வி நிறுவனத்தைக்கூட முதன்மையான 100 இடங்களுக்குள் கொண்டுவர முடியாதிருப்பது வியப்பளிக்கிறது. சர்வதேச அளவில் இந்திய கல்வி நிறுவனங்கள் முன்னேற முடியாமைக்கு காரணம் மற்றும் கல்வியின் நோக்கம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறதா என்றும் ஆராய்வது அவசியம்.
 பட்டம் பெற்று வெளிவரும் 100 பேரில் சராசரியாக 20 பேர் மட்டுமே அவரவர் துறைகளில் ஓரளவு நிபுணத்துவம் பெருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் பல்லாயிரக் கணக்கான ரூபாய் செலவிட்டுப் படித்து பயனில்லாமல் போனால், அது அந்த மாணவருக்கும் அவரைச் சார்ந்த குடும்பத்திற்கும் மட்டுமல்லாமல் நாட்டிற்கும் மனிதவளத்திற்கும் இழப்பாகி விடும்.
 சர்வதேச அளவில் கல்வித் தரத்தை நிர்ணயிப்பதற்கென கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகளை "தி டைம்ஸ்' தர நிர்ணய அமைப்பு பட்டியலிட்டுள்ளது. அவை,
 1.கற்றல், கற்பித்தல் முறைகளில் சரியான உத்திகள்
 2. கல்வி முறையில் ஆய்வு சார்ந்த பங்களிப்பு
 3.கல்வி ஆராய்ச்சி முடிவுகளின் விளைவால் கிடைக்கும் சமூக பொருளாதார வளர்ச்சி
 4. கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கிடையேயான அறிவுசார் பரிமாற்றங்கள்
 5. சர்வதேச அளவிலான புரிந்துணர்வுகள் ஆகியவை ஆகும்.
 இந்த காரணிகளை உள்ளடக்கி ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தும் கல்வி முறையே மனிதவள மேம்பாட்டிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படும் என அறியப்படுகிறது.
 சர்வதேச காப்புரிமை முகமை அளித்துள்ள புள்ளி விவரத்தின்படி, தங்களது புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதில் ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் முன்னனியில் உள்ளன. இந்த நாடுகளே கல்விக்கான சர்வதேசத் தரவரிசைப் பட்டியலிலும் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது கவனிக்கப்பட வேண்டும்.
 இந்தியாவில் பட்டம் வழுங்கும் பல்கலைக்கழங்கள் 677-ம், கல்லூரிகள் 37,204-ம் உள்ளன. உயர் கல்விக்காக மட்டும் மத்திய அரசு இந்த நிதியாண்டில் 26,855 கோடி ரூபாயும், பள்ளிக் கல்விக்காக 42,219 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.
 ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் கல்வியின் தரம் உயர்ந்து விடவில்லை. நமது கல்வியின் நோக்கம் சரியான பாதையில் செல்கிறதா என்பதை ஆய்வு செய்வது அவசியம்.
 இனி வரும் காலங்களிலாவது எழுத்துத் தேர்வையும் அதன் தேர்வு முடிவுகளையும் மட்டுமல்லாமல் மாணவர்கள் பெற்ற திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், மனித வள மேம்பாட்டில் கற்றல், கற்பித்தலின் பங்கு என கல்விக்கு வேண்டிய பிற நுட்பமான காரணிகளையும் கருத்தில் கொண்டு கல்லூரிகளைத் தரநிர்ணயம் செய்ய வேண்டும்.
 பட்டம் பெரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கேற்ப வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் புதிய தொழிற்கூடங்களை அரசு உருவாக்க வேண்டும். நாட்டின் பல முன்னணி கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களோடு உடன்பாடுகள் செய்து அவற்றுடன் இணைந்து கல்வி கற்பிக்கவும் செய்கின்றன.
 இதைப் போலவே பிற அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களும் புரிதலுடன் உணர்ந்து படிக்கும்படி, பாடத்திட்டங்களுக்கு இணையான செயல் வழிக் கல்வியை தொழில் நிறுவனங்களோடு இணைந்து கற்றிட நமது கல்விக் கொள்கை உறுதி செய்ய வேண்டும்.
 கல்வியின் நோக்கம் முழுமை அடைய வேண்டுமெனில், சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதைப் போல, கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதாக மட்டுமல்லாமல், அது மனிதனின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வதாக இருக்க வேண்டும்.
 நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும் மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தனது சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக் கூடிய கல்வி முறைதான் நமக்கு வேண்டும்.
 எஸ். பாலசுப்ரமணியன்,
 மயிலம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com