வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
பாடியவர் : பவ்யா ஹரி
விளக்கம்
பாவை நோன்பு இருக்கவிருக்கும் சிறுமியர்களை வரவேற்ற பின்னர், நோன்பு நோற்கும் சமயத்தில் எவை எவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பன விவரித்து சொல்லப்படும் பாடல். பையத் துயின்ற=மெதுவாக உறங்குகின்ற: பாற்கடலில் உறங்குவது போல் தோன்றினாலும், உலகில் நடப்பவை அனைத்தும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் திருமால் என்பதை உணர்த்தும் பொருட்டு அறிதுயில் என்று கூறுவது வழக்கம். இங்கே அதனை சற்றே மாற்றி, பையத் துயின்ற பரமன் என்று குறிப்பிட்டு, பெருமாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழவில்லை என்று இங்கே ஆண்டாள் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
இந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்களாக; பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும்; பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.