தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்

கண்ணன் வந்த பின்னர் தான் எழுந்து செல்லலாம் என்று படுக்கையில் புரளும் சிறுமியை எழுப்பச் செல்லும் சிறுமிகள், தாங்கள் பலமுறை அழைத்தும், அவள் வெளியே வந்து கதவினைத் திறக்காமல் இருப்பதைக் கண்டு, அந்த சிறுமியின் தாயினை அழைத்து தனது மகளை எழுப்புமாறு வேண்டும் பாடல். உறங்குவதை துயிலுதல் என்று சொல்வது வழக்கம். இறப்பினையும் துயில் என்று பல சமயங்களில் குறிப்பிடுவதால், மங்கல வழக்காக துயிலுதல் என்ற சொல் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் அதிக நேரம் தூங்கினால் அவர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே துயிலுதல் என்பதை கண் வளர்தல் என்று இங்கே ஆண்டாள் குறிப்பிடுகின்றார். தாலாட்டுப் பாடல்களில் கண்வளராய் என்று சொல்வதை நாம் அனைவரும் கேட்டுள்ளோம்.

பொழிப்புரை

ஒளி வீசும் சிறந்த மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களில் நாற்புறமும் விளக்குகள் எரிய, அகிற்புகை வாசனை எங்கும் மணக்க, பஞ்சணையில் துயில் கொள்ளும் எங்களது மாமன் மகளே, நீ எழுந்து வந்து மணிகள் பொருத்தப் பட்டுள்ள கதவின் தாழினைத் திறப்பாயாக. எங்களது மாமியே, நாங்கள் பல முறை அழைத்தும், வியப்படையத்தக்க வகையில் மாயங்கள் பல புரிபவன் என்றும், மாதவன் என்றும் வைகுந்தன் என்றும் பலவாறு கண்ணனின் திருநாமங்களை சொல்லிய பின்னரும், எழுந்திராமல் உமது மகள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றாள். அவள் ஏன் வாய் திறந்து ஏதும் பேசாமல் இருக்கின்றாள், அவள் என்ன ஊமையா, அல்லது அவள் செவிடா, நாங்கள் பேசியது ஏதும் அவளின் காதுகளில் விழவில்லையா, அல்லது உறக்கத்தினால் விளைந்த சோம்பல் அவளை ஆட்கொண்டுவிட்டதா, அல்லது எழுந்து வெளியே வாராத வகையில் படுக்கையில் காவலுக்கு உட்பட்டு இருக்கின்றாளா, அல்லது ஏதேனும் மந்திரத்தின் வயப்பட்டு மயங்கி இருக்கின்றாளா, எங்களுக்கு ஏதும் புரியவில்லை. எனவே மாமியே நீங்கள்தான் அவளை எழுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.